Close

Monday Grievance Day Petition Meeting (06/12/2021)

Publish Date : 06/12/2021
.

செ.வெ.எண்:-12/2021

நாள்:06.12.2021

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (06.12.2021) நடைபெற்றது. இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 340 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுகிறது.

இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும், பெறப்பட்ட மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

மேலும், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்கும் திட்டங்களின் கீழ், மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஆணைகளை 35 பயனாளிகளுக்கும், 33 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள், 12 பயனாளிகளுக்கு பழங்குடியினர் வகுப்பு சான்று, 5 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை சான்று, விபத்து நிவாரணமாக 10 பயனாளிகளுக்கு தலா ரூ.1,00,000 வீதம் மொத்தம் ரூ.10,00,000 நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

2019-2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்பள்ளம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோவிலூர், திண்டுக்கல் நகர் புனித சவேரியார் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, சவேரியார்பாளையம் ஆகிய பள்ளிகளுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்க, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சி.மாறன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆர்.ஆனந்திஇ கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.முருகேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.சீ.கருப்புச்சாமி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.