Monitoring and Eradication of Counterfeit Liquor

செ.வெ.எண்:-39/2023
நாள்:-23.05.2023
திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் பணிகள் மீதான ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் பணிகள் மீதான ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(23.05.2023) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் புழக்கம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும். கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை தடுப்பு பணிகளில் மிக அதிக கவனம் செலுத்திட வேண்டும். குறிப்பாக தொலைதுார கிராமங்கள், மலைகிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கவனம் செலுத்திட வேண்டும். வட்ட அளவில் வட்டாட்சியர் உள்ளிட்ட துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து கண்காணிப்புக்குழு அமைத்து, கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பல்வேறு இன்பார்மர்களை நியமித்து தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் செயல்பட வேண்டும். மெத்தனால் பயன்படுத்தக்கூடிய ஆலைகளில் மெத்தனால் இருப்பு குறித்த விபரங்களை தெரிந்து, அங்கிருந்து மெத்தனால் வெளியில் யாருக்கும் விற்கப்படுவது இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து நமது மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மது 100 சதவீதம் புழக்கத்தில் இல்லை என்ற நிலையை உறுதி செய்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கு.பிரேம்குமார், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் திரு.ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.