Monitoring Officer Meeting – North east monsoon

செ.வெ.எண்:-37/2022
நாள்: 15.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(15.11.2023) வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர்/ மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், அணைகளில் நீர் இருப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். மழையளவு, அணைகளில் நீர் நிலவரங்கள், மழைக்காலங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள், அங்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும், மீட்புக் குழுவினர் மற்றும் அவர்களிடம் உள்ள மீட்பு பணிக்கான உபகரணங்கள் போன்ற விபரங்கள், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து கேட்டறிந்தார். பாதுகாப்பற்ற பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள அரசு கட்டடங்கள், சீரமைப்பட வேண்டிய கட்டடங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மண் சரிவுகளை சீரமைக்க ஜேசிபி இயந்திரம், மரங்கள் சாலைகளில் சரிந்து விழுந்தால் அவற்றை விரைந்து அப்புறப்படுத்துவதற்காக மரம் வெட்டும் நவீன கருவிகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் /திண்டுக்கல் மாவட்ட அனைத்து துறை வளர்ச்சி திட்டப்பணிகள் கண்காணிப்பு அலுவலர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
வடகிழக்கு பருவமழைக் காலம் தற்போது தொடங்கியுள்ளது. நடப்பு பருவத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 982.77 மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. பாலாறு பொருந்தலாறு அணை (மொத்த உயரம் 65 அடி) நீர்மட்டம் 55.45 அடி, பரப்பலாறு அணை (மொத்த உயரம் 90 அடி) நீர்மட்டம் 68.58 அடி, வரதமாநதி அணை (மொத்த உயரம் 66.47 அடி) நீர்மட்டம் 66.47 அடி, குதிரையாறு அணை (மொத்த உயரம் 79.99 அடி) நீர்மட்டம் 73.08 அடி, குடகனாறு அணை (மொத்த உயரம் 27.07 அடி) நீர்மட்டம் 14.60 அடி, நங்காஞ்சியாறு அணை (மொத்த உயரம் 39.37 அடி) நீர்மட்டம் 27.79 அடி, மருதாநதி அணை(மொத்த உயரம் 74 அடி) நீர்மட்டம் 72.00 அடி என்ற அளவில் உள்ளது.
இப்பருவமழை காலங்களில் பெய்யக்கூடிய கனமழையினால் சேதங்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல், சிறுமலை, பண்ணைக்காடு தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்தன. அவை உடனுக்குடன் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, அதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 4 இடங்கள் நடுத்தர பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 56 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன. மேற்படி இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கண்காணிக்க மற்றும் ஒருங்கிணைக்க மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்த குழுக்கள் கனமழை, புயல், வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்படும் சேதங்களை சரிசெய்யவும், பாதிப்புகளால் இன்னலுறும் பொதுமக்களை மீட்டு தேவையான வசதிகள் செய்யும் பணிகளை மேற்கொள்ளவும், அதற்காக 66 பள்ளிகள், 4 திருமண மண்டபங்கள், 5 சமுதாயக் கூடங்கள் என மொத்தம் 75 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் அதை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிப்பதற்காக 559 முதல் தகவல் அளிப்பவர்கள் உள்ளனர். மின்வாரியத்துறை சார்பில் இதுவரை 675 மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு, மாற்றப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்கவும், மழை காலத்தை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டம் (Contingency Plan) தயாரித்து வைத்திருக்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் உபயோகப்படுத்த தேவையான வயர்லெஸ் கருவிகளை தயார் நிலையில் வைத்து, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
தீயணைப்புத் துறையின் மூலமாக இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகளின்போது சீரிய முறையில் செயல்பட மீட்புப் பணிக்கு தேவைப்படும் ரப்பர் படகுகள், மிதவைப் படகுகள் (Life buoys life jackets) மற்றும் ‘ரப்பர் டிங்கிகள்“ ஆகியவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். கனமழை காரணமாக தொற்று வியாதிகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக் குழு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாக்க தேவையான தடுப்பூசிகள் செலுத்த வேண்டும். பயிர் சேதம் ஏதேனும் இருப்பின் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து அணைகளின் மதகுகள் திறந்து மூடும் நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அணைக்கட்டு பகுதியில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி 24 மணி நேரமும் நீர்வரத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும். அணைக்கட்டு கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி வசதி, கம்பியில்லாச் செய்தி வசதி செய்யப்பட வேண்டும். அணையில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது, வழியோரக் கிராமங்களில் தகுந்த முன்னறிவிப்பு செய்து, தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆறுகள், குளங்கள், நீர் செல்லும் கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக அடைப்பதற்கு போதுமான சவுக்கு கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
படகுகள், கட்டுமரம் மற்றும் படகு இயக்குபவர்கள், நீச்சல் வீரர்கள் ஆகியோர்களை அவசர காலத்தில் பயன்படுத்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள், கட்டடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை தணிக்கை செய்து அவற்றின் கட்டட உறுதித்தன்மை, மின் வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை உறுதி செய்திட வேண்டும். அவர்களுக்கு உணவு வசதிகள் செய்வதற்கு தயார் நிலையில் இருத்தல் வேண்டும். அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் குடிமைப்பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்திட வேண்டும்.
சாலைகளில் சிறுபாலங்கள் மற்றும் பெரிய பாலங்களின் இருபுறமும் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கிராம ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள், சிறு பாலங்களின் இருபுறமும் அடைப்பு ஏற்படாதவாறு சுத்தம் செய்திட வேண்டும். மலைப்பாதைகளில் மண்சரிவு, மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து சாலையில் விழுவதால் வாகனப் போக்குவரத்து தடை ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் அலுவலர்களைக் கொண்ட மீட்புக்குழு அமைத்து போக்குவரத்தை உடனுக்குடன் சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேதமடையும் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை உடனடியாக மாற்றுவதற்கு தேவையான உபகரணங்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களுக்கு தேவையான மருந்துகள் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திட வேண்டும்.
அதிக மழை பொழிவு ஏற்பட்டாலும். வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் /திண்டுக்கல் மாவட்ட அனைத்து துறை வளர்ச்சி திட்டப்பணிகள் கண்காணிப்பு அலுவலர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் மாநகராட்சி ஆணையாளர் திரு.என்.ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சுப.கமலக்கண்ணன், திரு.சௌ.சரவணன், திரு.ஆர்.ராஜா, வருவாய் வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், பொதுப்பணித்துறையினர், ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.