Close

MTM-Success story

Publish Date : 20/09/2021
.

திண்டுக்கல் மாவட்டம்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லத்திற்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்குவதற்காக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 05.08.2021 அன்று துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி (இயன்முறை சிகிச்சை) மற்றும் வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை, பல்வேறு பரிசோதனைகள் ஆகியவை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சர் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று தொற்றாநோய்களுக்கான மருந்து பெட்டகத்தை வழங்கி நோயாளியின் வீட்டிற்கு சென்று அவருக்கு தேவையான இயன் முறை சிகிச்சை சேவையினை பார்வையிட்டு ஊக்கப்படுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து நோயாளிகளின் வீட்டிற்கே நேரில் சென்று சேவை அளிப்பதற்கான வாகனங்களை இத்திட்டத்தின் கீழ் தொடங்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தின் முதற்கட்ட இலக்கான 30 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவதன் மூலம் ஆண்டு இறுதியில் மாநில அளவில் ‘அனைவருக்கும் நலவாழ்வு’ என்ற உயரிய இலக்கை அடையும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 05.08.2021 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவ கண்காட்சியை பார்வையிட்டு, அப்பகுதி பயனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று மருந்துகளை வழங்கினார்கள்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ், தொற்றாநோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்படும். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சமுதாய நலப்பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் பரிசோதனை மூலமாக 5,650 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 3,350 சர்க்கரை நோயாளிகளும் மற்றும் 2 நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 2,300 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 2 மாதங்களுக்கான மருந்துப் பெட்டகங்கள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதுகு தண்டுவடம் செயலிழப்பு, மூட்டுத்தேய்மானம், பக்க வாதம், தசைச்சிதைவு நோய், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல் போன்ற சேவைகள் மற்றும் அதற்கென வட்டார அளவில் நியமிக்கப்பட்டுள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் மூலம் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 572 நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள், வயதானவர்கள், நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நோயாளிகள் என 467 நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 11,280 நோயாளிகள் கண்டறிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நோயாளியும் சமுதாயநலப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வகைபடுத்தப்படுகிறார்கள். இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடை நிலை சுகாதார சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

நிலக்கோட்டை வட்டம், முசுவனூத்து கிராமத்தைச் சேர்ந்த திரு.பாலகிருஷ்ணன் (வயது 50) எனபவர் தெரிவித்ததாவது: நான் கூலி வேலை செய்து வருகிறேன். நான் வேலைக்கு செல்லும்போது, விபத்து ஏற்பட்டு கால் மூட்டில் அடிபட்டது. அதற்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். கால் மூட்டில் சிறு ஆபரேஷன் செய்யப்பட்டது. கொரோனா காலம் என்பதால் தொடந்து சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வந்தேன். நடக்க முடியாத சூழ்நிலையில் எதிர்காலத்தை நினைத்து கவலை அடைந்தேன்.

தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் மூலம் மருத்துவ குழுவினர் எங்கள் வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்தனர். எனக்கு பயிற்சிகள் அளித்ததுடன், மருந்துகள் வழங்கினர். வீட்டிற்கே வந்து மருந்துகள் வழங்குவதுடன் முட நீக்கு சிகிச்சை அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் எனக்கு செலவும், நேரமும் குறைகிறது. இத்தகைய சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

நிலக்கோட்டை வட்டம், மாலைக்கவுண்டன்பட்டி ஊராட்சி, பொட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.செல்வராஜ்(வயது 61) தெரிவித்ததாவது: எங்கள் கிராமத்தில் நான், எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். இரண்டு பேரும் தினக்கூலி தொழிலாளர்கள். எனக்கு காலில் புண் ஏற்பட்டு ஒரு ஆண்டாக அவதிப்பட்டு வருகிறேன். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போது, இது நரம்பு சம்பந்தப்பட்ட புண், தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நான் சிகிச்சைக்காக எங்கள் கிராமத்தில் இருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பேருந்தில் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வந்தேன். அதனால், மருத்துவமனைக்கு செல்ல முடியாமல், உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தேன்.

இப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் மருத்துவக் குழுவினர் எங்கள் வீட்டிற்கு வந்து, காலில் இருந்த புண்ணிற்கு மருந்து கட்டி, தேவையான மாத்திரைகள் வழங்கினர். தற்போது, புண் குணமாகி வருகிறது. கொரோனா காலம் மற்றும் வயது முதிர்வு, பொருளாதார சூழ்நிலை காரணமாக பாதியில் விட்ட சிகிச்சையை மீண்டும் தொடர்ந்து சிகிச்சை பெற ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தினை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை என்சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி, அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்தோர்களுக்கும் மற்றும் அவர்களின் வருங்கால சந்ததியினரையும் பாதுகாத்து, வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திண்டுக்கல் மாவட்டம்.