Close

NammaOru super Program

Publish Date : 16/05/2023
.

செ.வெ.எண்:-49/2023

நாள்:-28.04.2023

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் “நம்ம ஊரு சூப்பர்“ திட்டம் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் “நம்ம ஊரு சூப்பர்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.04.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு முதல் “நம்ம ஊரு சூப்பர்“ என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி, கிராமப்புற பகுதிகளில் தூய்மையை பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு வரும் மே 1 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 45 தினங்களுக்கு “நம்ம ஊரு சூப்பர்“ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

“நம்ம ஊரு சூப்பர்“ திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் நீர் நிலைகளில் மாசுகள் ஏற்படாத வகையில் தூய்மைப்படுத்த வேண்டும். மேலும் அதிக குப்பை சேரும் இடங்களை கண்டறிந்து அவைகளை அப்புறப்படுத்த வேண்டும். தன் குப்பை தன் பொறுப்பு என்பதை அனைவரும் உணரும் வகையில் விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் அங்கன்வாடி பகுதிகளில் மே மாத இறுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கோவில்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், காய்கறி சந்தை உள்ளிட்ட குப்பைகள் அதிகம் சேரும் இடங்களில் தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெறும் வகையில் உங்களுக்கு பட்டியல் வழங்கப்படும். நீங்கள் அதுக்காக சரியாக திட்டமிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களும் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும்.

01.05.2023 முதல் 13.05.2023 வரை பொது நிறுவனங்கள்/இடங்களை பெருமளவில் சுத்தம் செய்தல், 08.05.2023 முதல் 13.05.2023 வரை துப்புரவு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அனைத்து தொழிலாளர்களுக்கும்(துப்புரவு பணியாளர்கள், துாய்மைக்காவலர்கள், பள்ளிகள், பொது நிறுவனங்களில் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்) சுகாதார மற்றும் நல நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவித்தல். 15.05.2023 முதல் 27.05.2023 வரை சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை உருவாக்குதல். 29.05.2023 முதல் 03.06.2023 வரை ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி தடை செய்தல் மற்றும் மாற்றுப்பொருட்களை பயன்படுத்துதல். 05.06.2023 முதல் 15.06.2023 வரை தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தல்.

விழிப்புணர்வு செயல்பாடுகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும். சுத்தம் செய்வதற்கு முன்பும், சுத்தம் செய்த பிறகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். மேலும் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் திருமதி திலகவதி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) திரு.சுரேஷ், மாவட்ட சமூக நலன் அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, உதவி இயக்குநர்(பஞ்சாயத்து) ரெங்கராஜன், மகளிர் திட்டம் உதவி இயக்குநர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.