National Natural Medicine Day

செ.வெ.எண்:-43/2023
நாள்: 17.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய இயற்கை மருத்துவ தின விழாவை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(17.11.2023) 6-ஆவது தேசிய இயற்கை மருத்துவ தின விழாவை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-
இயற்கை மருத்துவம் என்பது மருந்து மாத்திரைகள் மற்றும் எந்தவிதமான பக்கவிளைவும் இல்லாமல் பஞ்சபூதத்தின் சாரங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றைக் கொண்டு அனைத்து நோய்களுக்கும் அமைதியையும், பொறுமையையும், இறையருளையும் கொண்டு பூரண குணமளிக்கப்படும் இனிமையான சிகைச்சை முறையாகும்.
இயற்கை மருத்துவ சிகிச்சை முறையில், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், உள் மற்றும் வெளி மூலம், அல்சர், உடல் பருமன், அஜீரணக் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள், தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சி, சுவாசக் கோளாறுகள், இரத்த சோகை, முடக்கு வாதம், மூட்டு வலிகள் போன்றவற்றை தீர்க்க சிகிச்சை, மனநல ஆலோசனைகள், குடும்ப நல ஆலோசனைகள், கர்ப்பகால யோகா ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இயற்கை நல ஆரோக்கியத்திற்குத் தேவையான இயற்கை உணவுகள், சத்துமாவு, பேரிச்சம்பழம், நாட்டு சர்க்கரை பாரம்பரிய உணவு வகைகளை நாம் பயன்படுத்திட வேண்டும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். பசியில்லாமல் சாப்பிடவேண்டாம், பசித்தவுடன் அரை டம்ளர் குளிர்ந்த தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும், இரண்டாவது பசி எடுக்கும் போது பழங்கள் அல்லது உணவு அருந்த வேண்டும், வெறும் வயிற்றில் இனிப்பான பழங்கள் சாப்பிடுவது நன்மை தரும், உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும், புளிப்பு, காரம் அதிகளவில் பயன்படுத்தக் கூடாது, வயிறு முழுமையாக நிரம்ப சாப்பிட கூடாது, காலையில் சூடாக எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது, காலையில் இளநீர், பழங்கள் (பப்பாளி, தேங்காய், பேரிச்சை, வாழைப்பழம், கருப்பு திராட்சை) சாப்பிடலாம், தினமும் இரண்டு வேலை குளிர்ந்த அல்லது வெதும்ப நீரில் 15 நிமிடம் குளிக்க வேண்டும், தாகம் எடுக்கும்போது தண்ணீர் 1 அல்லது 2 டம்ளர் மட்டும் குடிக்க வேண்டும், சாப்பிடும்போது தண்ணீர் நிறைய குடிக்கவோ, டிவி பார்க்கவோ, அதிகம் பேசவோ கூடாது, இரவு 7-8 மணிக்குள் சாப்பிட்டு, 15 நிமிடம் மெதுவாகவும், காற்றோட்டமாகவும் நடக்க வேண்டும், இரவு 9 மணிக்குள் கண்டிப்பாக தூங்க வேண்டும், குறைந்தது 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம், கடைகளில் சாப்பிடுவதும், வெளியில் சாப்பிடுவதையும் முடிந்தவரை குறைக்கவும், விசேஷங்களில் அளவாக, புளிப்பு, காரம் குறைவாக சாப்பிட வேண்டும், வாரம் ஒரு நாள் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் காலங்களில் பாரம்பரிய மருத்துவ முறைகள்தான் நமக்கு பெரிதும் பாதுகாப்பாக இருந்தது. பலர் பாரம்பரிய மருத்துவ முறைக்கு மாறி வருகின்றனர். எனவே, நாம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் நம் முன்னோர்களின் இயற்கை வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்தால் நலமுடன் வாழலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
இவ்விழாவில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் மரு.ஆர்.சுகந்தி ராஜகுமாரி, இணை இயக்குநர்(நலப்பணிகள்) மரு.பூமிநாதன், மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் மரு.அமுதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ அலுவலர்கள் மரு.ஆ.ஈ.தேவராஜா, மரு.த.மகாமுனி, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் திரு.வீரமணி, தலைமை மருத்துவர் மரு.சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் மரு.புவனேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.