Close

National Voters Day – Awareness

Publish Date : 27/01/2024
.

செ.வெ.எண்:56/2024

நாள்:24.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 14-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் அவர்கள் தலைமையில் இன்று(24.01.2024) நடைபெற்றது.

இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரித் திங்கள் 25-ஆம் நாளானது தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் 14-வது தேசிய வாக்காளர் தினமானது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(24.01.2024) நடைபெற்றது. அனைத்துத் துறை அலுவலர்களும் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி, ”மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்” என மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியினை வாசிக்க அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி, திண்டுக்கல் தலைமை தபால் நிலையம், திண்டுக்கல் பேருந்து நிலையம், பூ மார்கெட், அரசு தலைமை மருத்துக்கல்லூரி மருத்துவமனை வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், நேரு யுவ கேந்திரா உட்பட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோட்டைக்குமார், வட்டாட்சியர்கள் திரு.செழியன், திரு.வில்சன் தேவதாஸ், தனி வட்டாட்சியர்(தேர்தல்) திரு.சரவணன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சரண் கோபால், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.