Close

New Ration card – The Hon’ble Ministers distribution

Publish Date : 06/07/2021
.

செ.வெ.எண்:-06/2021

நாள்:-05.07.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் 3100 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தகவல்.

குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை – மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, அவர்கள் ஆகியோர் இன்று(05.07.2021) பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் இன்று பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறார்கள். அவர் துணை முதல்வராக இருந்த காலத்தில் பழனி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சியின்போது பழனி பகுதிக்கு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த பொற்கால ஆட்சி தற்போதும் தொடந்து வருகிறது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக ரூ.22.72 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் விரைவில் முடியும் தருவாயில் உள்ளன.

முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை என எந்த துறையானாலும் கேட்டால் இல்லை என்ற நிலை எப்போதும் இல்லை என்ற நிலையை உறுதிப்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுக்கு இணங்க திண்டுக்கல் மாவட்டத்தில் 3100 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 110 குடும்ப அட்டைகள் தற்போது வழங்கப்படுகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் பெரிய சாதனைகளை 5 ஆண்டுகள் மட்டுமல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் சேவை செய்வதில் முதல் இடத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார். அவர்கள் வழியில் நாங்களும் இணைந்து அவர் சொன்ன திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். உங்கள் இல்லம் தேடி வந்து, உங்கள் வீட்டுப் பிள்ளையாக வந்து சேவை செய்வோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திடவும், பொருட்களின் தரத்தினை உறுதி செய்திடவும், நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுவிநியோகத் திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல், பல துறைகள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வருதல், வாடகைக் கட்டிடங்களில் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்குச் சொந்த கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துதல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நெல் ஆகியவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவதை இணைய வழியில் கண்காணித்தல், எடைக்குறைவு போன்றவற்றைக் களைதல், தரமான சேவையினைப் பொதுமக்களுக்கு வழங்குதல் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக மக்களுக்குக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன், நகைக்கடன் வழங்குதல், மானிய விலையில் உரம் மற்றும் விவசாய இடுபொருட்கள் வழங்குதல் போன்றவற்றை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதில் ஒன்றுதான் குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் அனைத்து தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்ற வாக்குறுதி. இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்களை தங்குதடையின்றி கிடைக்க வேண்டும். குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டைகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அதன்படி தற்போது தகுதியானவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் 15 நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை இருந்ததா? இல்லையா? என்ற அளவிற்கு அதன் செயல்பாடுகள் கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது, மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, அவர்கள் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று குடமுழுக்கு, திருப்பணிகள், பணியாளர்கள் தேவைகள் குறித்து கேட்டறிந்து இந்துசமய அறநிலையத்துறை செயல்பாடுகளை உலகறியச் செய்து வருகிறார்.

தமிழகத்தில் வருவாய் அதிகமுள்ள கோயில்களில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலும் ஒன்று. இங்கு பக்தர்கள் அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது பழனி கோயிலை உலக அளவில் சிறப்பிக்கும் வகையில் இணையதள வசதிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுக்கு இணங்க, கொரோனோ பரவல் தடுப்பு காலத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 வீதம் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.4000 வழங்கப்பட்டது. மேலும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 6,40,376 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முழுநேரக்கடைகள் 748, பகுதி நேரக்கடைகள் 291 என மொத்தம் 1039 நியாய விலைக்கடைகள் மற்றும் 158 நகரும் நியாய விலைக்கடைகள் மற்றும் 13 மண்ணெண்ணை வழங்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 6,55,309 குடும்ப அட்டைகள் உள்ளன.நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளில் புதிய குடும்ப உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கும் மனுக்கள் இணையவழியாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மின்னணு குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது விருப்பத்தின்பேரில் வபைபாடு மாற்றம் செய்ய TNPDS இணையதளத்தில் விண்ணப்பித்தால், உரிய விசாரண செய்யப்பட்டு குடும்ப அட்டை வகைமாற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோவிந்தராசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.வீ.பழனிகுமார், சமூகநல அலுவலர் திருமதி புஷ்பகலா, பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.