NM – Kalluri Kanavu

செ.வெ.எண்:-85/2025
நாள்:-27.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
“நான் முதல்வன்” திட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லுாரிக் கனவு’ நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைந்த மாணவ, மாணவிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கல்வி மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் நலத்திட்டங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில், மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது. வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்“ என்ற புதிய திட்டத்தை 01.03.2022 அன்று தொடங்கி வைத்தார். மேலும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பாடநூலை வெளியிட்டு இதற்கென உருவாக்கப்பட்டுள்ள naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். “நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவியல் சிந்தனையில், ஆற்றல் திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ. மாணவிகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம். எங்கு படிக்கலாம். எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும். தமிழில் தனித்திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும். நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன். உடற்பயிற்சி, நடை உடை நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ. மாணவிகளிடம் ஏற்படுத்தப்படும்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லுாரிக் கனவு’ நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 25.06.2022 அன்று சென்னையில் தொடங்கி வைத்து கல்லுாரி கனவு வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டார்கள். அதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லுாரிக் கனவு-2025 நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் காணொலிக்காட்சி வாயிலாக 14.05.2025 அன்று சென்னையில் தொடங்கி வைத்து, கல்லூரிக் கனவு 2025 உயர்கல்வி வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் “கல்லுாரிக் கனவு” நிகழ்ச்சி இந்த ஆண்டு திண்டுக்கல் ஜிடிஎன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பழனி பழனியாண்டவர் கல்லுாரி மற்றும் நத்தம் கள்ளழகர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, கல்லுாரி கனவு வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சிகளில் 12ம் வகுப்பு முடித்த 3,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், உயர்கல்வி தொடர்பாக மாணவர்களை ஊக்குவித்தல், பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், வணிகம் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள், அரசு வேலைவாய்ப்புகள், வங்கிக் கடனுதவிகள், கல்வி உதவித்தொகைகள் தொடர்பாக விளக்கம், வேலைவாய்ப்புத்துறை சார்பில் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் தொடர்பாக விளக்கம், முன்னோடி வங்கி சார்பில் கல்விக் கடனுதவிகள் தொடர்பான விளக்கம், உயர்கல்வி படிக்க தேவையான விடுதி வசதிகள் குறித்தும், கல்வி உதவித்தொகை குறித்தும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
‘கல்லுாரிக் கனவு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற்ற நத்தம் வட்டம், சிறுகுடியைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷிணி தெரிவித்ததாவது:-
நான், சிறுகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். நத்தத்தில் நடைபெற்ற ‘கல்லுாரிக் கனவு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 12-ஆம் வகுப்பு முடித்த பின்னர் என்னென்ன உயர்கல்வி படிப்புகள் உள்ளன. அவற்றை எங்கெங்கு படிக்கலாம். எந்தெந்த படிப்பிற்கு நுழைவுத்தேர்வு உண்டு என்பது போன்ற தகவல்களை அறிந்துகொண்டேன். மேலும், எந்தெந்த படிப்பிற்கு எங்கெங்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. அதேபோல் அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் போன்றவை குறித்து அறிந்துகொண்டேன். அரசு சார்பில் நடைபெறும் இதுபோன்ற முகாம்களில் தெரிவிக்கப்படும் தகவல்கள் நம்பகத்தன்மையுடன் இருக்கும். இது எங்களைப்போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. மாணவ, மாணவிகளின் உயர் கல்வி மேம்பட இதுபோன்ற வழிகாட்டுதல்களை வழங்க வழிவகை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘கல்லுாரிக் கனவு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நத்தம் வட்டம், ஊராளிப்பட்டியை சேர்ந்த மாணவி ஜனனி தெரிவித்ததாவது:-
நான், ஊராளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லுாரிக் கனவு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 12-ஆம் வகுப்பு முடித்த பின்னர் உயர் கல்வி படிப்புகள், அதன்மூலம் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அறிந்துகொண்டேன். திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்பாகவும் தகவல்களை அறிந்துகொண்டேன். பெண்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக அரசு அறிவித்துள்ள சலுகைகள், கல்வி உதவித்தொகைகள், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு, முன்னுரிமை போன்ற தகவல்களை அறிந்துகொண்டேன். 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் உயர் கல்வி படிப்புகள், எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அறிந்துகொண்டேன். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகள், அங்குள்ள படிப்புகள் குறித்த விவரங்களை அறிந்துகொண்டோம். இது எங்களைப்போன்ற கிராமப்புற மாணவிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. மாணவ, மாணவிகளின் உயர் கல்வி மேம்பட வழிவகை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒரு மனிதனின் மாபெரும் சொத்து என்பது அவனது கல்விதான். கல்வியால் அடையும் புகழ்தான் நிலையானது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி வெறும் வழிகாட்டி நிகழ்ச்சியாக மட்டுமின்றி, கல்வி, விளையாட்டு, கலைத்திறன், தொழில்நுட்பம் என்று ஒவ்வொரு துறையிலும் தமிழக இளைஞர்களை வெற்றியாளர்களாக செதுக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. தமிழக மாணவ, மாணவிகளின் உயர்கல்வி மேம்பாட்டுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மனதார நன்றி தெரிவிக்கின்றனர்.,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல் மாவட்டம்.