NM- TAHDCO

செ.வெ.எண்:-79/2025
நாள்:-26.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வாயிலாக 944 பயனாளிகளுக்கு ரூ.13.32 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் உன்னத திட்டங்களை செயல்படுத்திடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ நிறுவனம்) ஆதி திராவிடர் மற்றும் பழங்குழயின மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் பொருட்டு பல பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தனி நபர் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், படித்து வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள், பெண்கள், ஆதரவற்ற நலிந்தோர் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவரின் அனைத்துத் தரப்பினரும் மற்றும் துப்புரவு பணியாளர் குடும்பத்தை சார்ந்தவர்களும் பயனடையும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2021-22ம் நிதியாண்டில் தொழில் முனைவோர் கடன் திட்டம்-(EDP), இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கடன் திட்டம் (SEPY), நிலமேம்பாட்டுக் கடன் திட்டங்களின் கீழ் மொத்தம் 135 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.1.97 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
2022-23ம் நிதியாண்டில் தொழில் முனைவோர் கடன் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கடன் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கான பொருளாதார கடன் திட்டம் மற்றும் நில மேம்பாட்டு கடன் திட்டங்களின் கீழ் மொத்தம் 534 பயனாளிகளுக்கு ரூ.6.90 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
2023-24ம் நிதியாண்டில் தொழில் முனைவோர் கடன் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கடன் திட்டம், நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டு கடன் திட்டம் மற்றும் (CM ARISE) சி.எம்.அரைஸ் திட்டங்களின் கீழ் மொத்தம் 223 பயனாளிகளுக்கு ரூ.3.47 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
2024-25ம் நிதியாண்டில் 14.02.2025ம் தேதி வரை நிலம் வாங்கும் திட்டம் மற்றும் சி.எம்.அரைஸ் (CM ARISE) திட்டத்தின் கீழ் மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.95.73 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
2023-24 மற்றும் 2024-25ஆம் ஆண்டுகளில் தூய்மைப்பணியாளர் நலவாரியம் மூலம் இயற்கை மரண உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை 6 நபர்களுக்கு ரூ.1.05 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட திட்டங்கள் வாயிலாக, திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-22 முதல் 2024-25 வரை மொத்தம் 944 பயனாளிகளுக்கு ரூ.13.32 கோடி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
தாட்கோ தலைமையத்தில் இருந்து ட்ரோன் பயிற்சி, ஏர்லைன் கஸ்டமர் சர்வீஸ் பயிற்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு மெட்ராஸ் ஐ.ஐ.டி. மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டம் பயிற்சி, அழகுகலை பயிற்சி, IBPS பயிற்சி, தனியார் வங்கி நிதிதுறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய ஏதுவாக கணக்கு நிர்வாக (Account Executive) பணிக்கான பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பெறப்பட்டு தலைமையகம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தாட்கோ திட்டங்களின் மூலம் பயனடைந்த திண்டுக்கல் மாவட்டம், ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த திரு.தண்டபாணி என்பவர் மகன் டாக்டர் அஜய்குமார்(வயது 24) தெரிவித்ததாவது:-
நான் பல் மருத்துவத்தில் இளநிலை பட்டம்(பி.டி.எஸ்.) படித்துள்ளேன். நான் படிப்பு முடித்தவுடன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிறிது காலம் பணிபுரிந்தேன். சொந்தமாக கிளினிக் தொடங்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால், குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக கிளினிக் தொடங்க முடியாமல் தவித்து வந்தேன்.
அப்போதுதான், தாட்கோ மூலம் சிஎம்.அரைஸ் திட்டத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்க மானியத்தில் கடனுதவிகள் வழங்கப்படுவதை பத்திரிகைகளில் செய்தி வாயிலாக அறிந்தேன். அதையடுத்து, கடனுதவி கோரி திண்டுக்கல் தாட்கோ அலுவலகத்தை அணுகி, விண்ணப்பித்தேன். எனக்கு ரூ.3.15 வங்கி கடனுதவி கிடைத்தது. அதில் ரூ.1.10 இலட்சம் மானியம் வழங்கப்பட்டது. இதை வைத்து நான் திண்டுக்கல்லில் தற்போது டென்டல் கிளினிக் தொடங்கி உள்ளேன். இதில் கிடைக்கும் வருமானம் எங்கள் குடும்பத்தை நடத்தவும், கடன் தொகையை திரும்ப செலுத்தவும் போதுமானதாக உள்ளது.
என்னைப் போன்ற ஏழை எளிய இளைஞர்கள் சுயதொழில் தொடங்கிடவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்தார்.
தாட்கோ திட்டங்களின் மூலம் பயனடைந்த திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி கள்ளிப்பட்டியைச் சேர்ந்த திருமதி எம்.சுகன்யா(வயது 32) தெரிவித்ததாவது:-
நான் பி.ஏ. பட்டதாரி. எனது கணவர் சிவில் இன்ஜினியர். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடைய வருமானத்தில் குடும்பச் செலவு மற்றும் குழந்தைகள் படிப்புச் செலவுகளை சமாளிப்பது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் நானும் ஏதாவது சுயதொழில் தொடங்கலாம் என விரும்பினேன். ஆனால் அதற்கு பெரிய அளவில் முதலீடு செய்ய எங்கள் பொருளாதார நிலை தடைக்கல்லாக இருந்தது. அதனால், சிறிய அளவில் பெண்களே மேனேஜ் செய்துகொள்ளும் வகையிலான தொழில் தொடங்கிட திட்டமிட்டேன்.
அப்போதுதான், தாட்கோ மூலம் தொழில் முனைவோர் கடன் திட்டத்தில் தொழில் கடனுதவிகள் வழங்கப்படுவதை அறிந்து, திண்டுக்கல் தாட்கோ அலுவலகத்தை அணுகி, விசாரித்தேன். அப்போது, கற்பூரம் தயாரிப்பு தொழிலை சிறிய அளவில் தொடங்கிட கடனுதவி வழங்கப்படுவதை அறிந்தேன், மேலும், அந்த தொழிலில் பெண்களே இயந்திரங்களை இயக்கி கற்பூரம் தயார் செய்யும் வகையில் எளிமையாக இருப்பதையும் அறிந்தேன். அதையடுத்து கற்பூரம் தயார் செய்யும் நிறுவனம் அமைக்க கடனுதவி கோரி விண்ணப்பித்தேன். எனக்கு வங்கி மூலம் ரூ.1.77 இலட்சம் கடனுதவி கிடைத்தது. அதில் மானியமாக ரூ.62,139 கிடைத்தது. இதை வைத்து நான் செட்டிநாயக்கன்பட்டியில் கற்பூரம் தயார் செய்து, விற்பனை செய்து வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானம் எங்கள் குடும்ப செலவை சமாளிக்கவும், வாங்கி கடனை திரும்ப செலுத்தவும் போதுமானதாக உள்ளது.
என்னைப்போன்ற ஏழை பெண்களை தொழில் முனைவோராக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.