Close

Observer Inspection (Natham)

Publish Date : 02/04/2021
.

செ.வெ.எண்:-02/2021

நாள்:-02.04.2021

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் சட்டமன்ற தொகுதியில் மலைப்பகுதி கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் மலைப்பகுதி கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர்(திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதிகள்) திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தல் பொது பார்வையாளர்கள், செலவின கணக்கு பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 402 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 483 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 483 கட்டுப்பாட்டு கருவி, 543 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நத்தம் சட்டமன்ற தொகுதியில் 12 பதட்டமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது.

மலைப்பகுதி கிராமங்களான சின்னமலையூர், வலசை, பெரியமாப்பையூர் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குப்பதிவு செய்ய தேவையான அனைத்து வசதிகள், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக சாய்வுதள நடைமேடை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி, தளவாட சாமான்கள், மேற்கூரை பராமரிப்பு, தரை பராமரிப்பு, ஜன்னல் பராமரிப்பு, சாய்வுதளம் பராமரிப்பு, நுழைவு வாயில் பராமரிப்பு, கழிப்பறை பராமரிப்பு, இணையதள வசதி ஆகியவை முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்பு பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, நத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.வி.எம்.திருமலை மற்றும் தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.