Close

Palani Kovil Sasti Festival Tharisanam-Instruction

Publish Date : 03/11/2021

செ.வெ.எண்:-09/2021

நாள்:03.11.2021

அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின், மலைக்கோயிலில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுகள் அனைத்தும் திருக்கோயில் யூடியூப் சேனல் மற்றும் வலைதளம் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின், மலைக்கோயிலில் 2021ம் ஆண்டு கந்தர் சஷ்டி திருவிழா 04.11.2021 முதல் 10.11.2021 வரை நடைபெற உள்ளது. கோவிட்-19 கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருவிழாக்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். திருவிழா உற்சவ நிகழ்வுகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருவிழா உற்சவ நிகழ்வுகள் அனைத்தும் தொடர்புடைய திருக்கோயில் பணியாளர்கள் மூலம் மட்டுமே நடத்தப்படும். அதன்படி, கந்தர்சஷ்டி விழா நாட்களில் கீழ்க்கண்டவாறு பக்தர்கள் தரிசனத்திற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

04.11.2021 மலைக்கோயிலில் உச்சிக்காலத்தில் காப்பு கட்டும் உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை (காப்பு கட்டுதல் முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு வழக்கம்போல் அனுமதிக்கப்படுவர்).

05.11.2021 முதல் 10.11.2021 வரை தினசரி காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் சுவாமி புறப்பாடு மலைக்கோயிலில் நடைபெறும். மண்டகப்படி அனுமதி இல்லை. மண்டகப்படிகள் அனைத்தும் திருக்கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும்.

09.11.2021 சஷ்டி சூரசம்ஹாரம் நாளன்று மலைக்கோயிலில் காலை 11.00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 11 மணிக்கு பின்பு பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை. நண்பகல் 12.00 மணிக்கு உச்சிக்கால பூஜையும், பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும். பிற்பகல் 2.45 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்று உடன் சன்னதி திருக்காப்பிடப்படும் (சன்னதி சாத்தப்படும்). மலைக்கோயிலில் இருந்து சின்னக்குமார சுவாமி புறப்பட்டு கிரிவீதி வந்தடைவா. அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலிலிருந்து அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி புறப்பாடாகி மங்கம்மாள் மண்டபம் வந்தடைவார். மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் கிரிவீதியில் நடைபெறும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இரவு 9 மணிக்கு மேல் திருக்கோயில் சார்பாக வெற்றிவிழா நடைபெறும். வெற்றிவிழா முடிந்து மலைக்கு சென்று சம்ப்ரோக்சனம் செய்யப்பட்டு பின் இராக்கால பூஜை நடைபெறும்.

10.11.2021 (திருக்கல்யாணம்) காலை முதல் நண்பகல் 12.30 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணி வரை மலைக்கோயிலில் அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். நண்பகல் 12.30 மணிக்கு பின்பு வழக்கம்போல் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மாலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும், திருக்கோயில் உற்சவத்தில் தொடர்புடைய அர்ச்சகர்கள் பணியாளர்கள் மட்டும் இந்நிகழ்வில் அனுமதிக்கப்படுவார்கள்.

கந்தர்சஷ்டி திருவிழா நாட்களான 04.11.2021 முதல் 10.11.2021 வரை மண்டகப்படிகள் அனைத்தும் திருக்கோயில் சார்பாக நடைபெறும். சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுகள் அனைத்தும் திருக்கோயில் யூடியூப் சேனல் மற்றும் வலைதளம் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்ய திருக்கோயில் நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

09.11.2021ம் தேதி உச்சிக்கால பூஜை, சாயரட்சை பூஜை மற்றும் இராக்கால பூஜை ஆகிய பூஜைகளில் கட்டளைகளுக்கு அனுமதி இல்லை. மேலும், 10.11.2021ம் தேதி விளாபூஜை, சிறுகாலசந்தி, காலசந்தி மற்றும் உச்சிக்கால பூஜைகளில் கட்டளைகளுக்கு அனுமதி இல்லை.

பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், கைகளுக்கு கிருமி நாசினி தெளித்தும், பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். பக்தர்கள் அனைவரும் திருக்கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.