Palani Temple – Thaipoosam
செ.வெ.எண்:-27/2022
நாள்:11.01.2022
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் 14.01.2022 முதல் 18.01.2022 வரை சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருக்கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 14.01.2022 முதல் 18.01.2022 வரை திருக்கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் எதிர்வரும் 12.01.2022 முதல் 21.01.2022 வரையிலான 10 நாட்கள் தைப்பூசத் திருவிழா நாட்களாகும்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கோவிட்-19 ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மேற்படி திருவிழா கீழ்க்காணும் விபரப்படி நடைபெறும்.
- பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் எதிர்வரும் 14.01.2022 முதல் 18.01.2022 வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
- 12.01.2022-ஆம் தேதி தைப்பூசத்திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் கலந்துகொள்ளாமல் அனுமதியின்றி திருக்கோயில் மூலம் நடத்தப்படும்.
- தைப்பூசத் திருவிழா 10 நாட்களும் மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து மண்டகப்படிகளும் திருக்கோயில் ஆகமவிதிகளுக்குட்பட்டு திருக்கோயில் மூலம் நடத்தப்படும்.
- 17.01.2022-ஆம் தேதி நடைபெறும் சுவாமி திருக்கல்யாண நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வெள்ளிரதம் புறப்பாட்டிற்கு பதிலாக வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு திருக்கோயில் வளாகத்தில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு நடத்தப்படும்.
- 18.01.2022-ஆம் தேதி தைப்பூசத் திருநாளன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாலை 4.45 மணிக்கு சிறிய மரத்தேரில் திருக்கோயில் வளாகத்தில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு தேரோட்டம் நடைபெறும்.
- 21.01.2022-ஆம் தேதி தெப்ப உற்சவம் திருக்கோயில் வளாகத்தில் நடைபெறும். இதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மேலும், மேற்படி நிகழ்வுகள் திருக்கோயில் வலைதளம் மற்றும் யூ-டியூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.