Close

PALANI THAIPOOSAM-Meeting

Publish Date : 27/12/2021
.

செ.வெ.எண்:-62/2021

நாள்: 24.12.2020

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 18.01.2022 அன்று நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 18.01.2022 அன்று நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையாளர் திரு.ந.நடராஜன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கோவிட்-19 ஊரடங்கு, தளர்வுகளுடன் நடப்பில் உள்ள நிலையில், திருக்கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவதற்கு, கோவிட்-19 நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அருள்மிகு தண்டபாணி திருக்கோவிலில் தைப்பூசத்திருவிழா வருகின்ற 12.01.2022 காலை 6.45 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கி, 17.01.2022 மாலை 5.00 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இரவு 8.00 மணிக்கு மேல் வெள்ளிரதம் நடைபெறும். அதேபோல் 18.01.2022 அன்று தைப்பூச திருவிழாவும், அன்று மாலை 4.45 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெறும். 21.01.2022 அன்று இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் நடைபெறும். 21.01.2022 அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடியிறக்கம் நடைபெறும்.

மேலும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றுவதற்கு திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். இப்பகுதியில் கை கழுவதற்கான வசதியும், முககவசமும், கிருமி நாசினியும் போதிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு அரசு துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மேற்கு கிரிவீதியில் உள்ள சின்னக்குமாரர் விடுதி வளாகத்தில் 12 கட்டணமில்லா Dormitory Halls மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கட்டணமில்லா 48 குளியல் அறைகள் மற்றும் 48 கட்டணமில்லா கழிப்பறைகள் பக்தர்களின் வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காத வகையில் 8 டிக்கெட் கவுண்டர்கள் கிழக்கு வெளி பிரகாரத்தில் அமைக்கப்;பட்டுள்ளது. மலைக்கோவில் வடக்கு பிரகாரத்தில் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு கூடுதல் வரிசைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அமைக்கபட்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மழை/வெயிலில் சிரமப்படாமல் இருக்க ஏதுவாக நடமாடும் நிழற்கூரைகள் (Mobil Shed) மலைக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் பக்தர்களின் அவசர உதவிக்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை மற்றும் காவல் துறையினரால் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் புனித நீராடும் இடும்பன் குளம் மற்றும் சண்முகா நதியில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு மீட்பு பணி வீரர்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையினர் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட ஏற்பாடுகளுடன் கோவிட்-19 பாதுகாப்பினை பின்பற்றி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சி.மாறன், நெடுஞ்சாலைத்துறை, பொது சுகாதாரத்துறை, பேரூராட்சிகள் துறை உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.