Panchayat President meeting

செ.வெ.எண்:-50/2023
நாள்:-28.04.2023
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.04.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
ஊராட்சி தலைவர்கள் அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு, ஊராட்சி சாலைகள், ஆக்கிரமிப்பு அகற்றுதல், குடிநீர் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய பணிகள் தொடர்பாக மக்களின் கோரிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி முற்றிலும் தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை உபயோகிக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெகிழி இல்லா கிராமங்களை உருவாக்கிட வேண்டும். மேலும் நெகிழி கழிவுகளை அரைத்து எடுக்கக்கூடிய மையங்களையும் அமைத்து பயன்படுத்திட வேண்டும்.
திறந்தவெளி கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்தாமல் தங்களது வீடுகளில் உள்ள கழிவறையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தனிநபர் இல்ல கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடம் போன்ற கட்டமைப்புகளை 100 சதவீதம் பயன்படுத்தக்கூடிய வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுகாதாரத்திற்காக அரசு வழங்குகின்ற நிதியினை முழுமையாக பயன்படுத்திட வேண்டும்.
2022-23-ம் ஆண்டிற்கான அனைத்து வரி இனங்களும் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிய விருப்பம் தெரிவித்த அனைத்து நபர்களும் தகுதியின் அடிப்படையில் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே பள்ளிகள் உள்ள சமையல் கூடங்களை பழுது நீக்கம் செய்து வர்ணம் பூசி பராமரிப்பு செய்திட வேண்டும். சமையல் கூடம் இல்லாத பள்ளிகளில் புதிய கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மே 1 தேதி கிராம சபை கூட்டம் நடத்திட விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்களும் உறவினர்கள் குடும்பத்தினர் தலையீடுகள் இன்றி சுதந்திரமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு பொதுமக்களுக்கு சேவையாற்றிட வேண்டும் என பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி திலகவதி, உதவி இயக்குநர்(ஊராட்சி) ரெங்கராஜன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.