Plastic Ban – Kodaikanal Meeting

செ.வெ.எண்:-19/2023
நாள்:-06.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
நெகிழி இல்லா பசுமை கொடைக்கானலை பாதுகாப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், நெகிழி இல்லா பசுமை கொடைக்கானலை பாதுகாப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(06.11.2023) தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடுத்து நெகிழி இல்லா பசுமை கொடைக்கானலை உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் அனைத்து வகையான நெகிழி பைகள், 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் நெகிழி பாட்டில்கள், அனைத்து வகையான நெகிழ் குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்கள், அனைத்து கடைகள், வியாபார நிறுவனங்கள், பொது இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் அமைக்க வேண்டும். கொடைக்கானல் மலைப்பகுதிக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும், விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உணவகங்கள், பேக்கரி, இதர அனைத்து கடைகளிலும், “இங்கு 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நெகிழி பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை“ என்ற வாசக பதாகைகள் அமைக்க வேண்டும். கொடைக்கானல் மலைக்குச் செல்லும் வழித்தடங்களின் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெகிழித் தடுப்பு சோதனை சாவடிகளை செயல்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது ஒலிபெருக்கி, உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் நெகிழித் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நெகிழி பயன்படுத்துவதால் கொடைக்கானல் மலைப் பகுதியின் பசுமை பாதிப்பு, விலங்கினங்கள் உயிரிழப்பு குறித்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் நெகிழிக்கழிவுகளை தினமும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, நெகிழி பொருட்களை மறு சுழற்சி செய்வதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கொடைக்கானல் மற்றும் அனைத்து மலைப் பகுதியிலுள்ள கிராமங்கள், நகராட்சி, பேரூராட்சிகளில் நெகிழ் பாட்டில்களில் தண்ணீர், குளிர்பானங்கள் விற்பனை மற்றும் நெகிழி பைகள் பயன்பாட்டை தடுத்தல், பறிமுல் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மலைக்கிராமங்களில் அனைத்து வகையான நெகிழ்ப் பைகள், 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனை செய்வது, அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்துதல், விற்பனை செய்வதை தடுத்தல், பரிசோதனை செய்தல், அபராதம் விதித்தல், கடைகளுக்கு சீல் வைத்தல் போன்ற பணிகளை மாவட்ட அளவிலான நெகிழி தடுப்பு குழுவினர் மேற்கொள்ள வேண்டும். கடைகளில் பிளாஸ்டிக் கப், நெகிழிப் பைகள் மற்றும் நெகிழி பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து, சோதனை மேற்கொண்டு அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். பசுமை கொடைக்கானலை பாதுகாக்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர் திருமதி உதயா, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.சத்திய நாராயணன், கொடைக்கானல் நகராட்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.