Close

Pocso Court – Inaguration Function

Publish Date : 09/05/2023
.

செ.வெ.எண்:-39/2023

நாள்:-26.04.2023

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் (POCSO) வழக்குகளின் பிரத்தியேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி திரு.எஸ்.சிவகடாட்சம் அவர்கள் திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012ன் கீழ் (POCSO -Prevention Of Children from Sexual Offences) வழக்குகளின் பிரத்தியேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா இன்று(26.04.2023) திண்டுக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி திரு.எஸ்.சிவகடாட்சம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில், மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி திரு.எஸ்.சிவகடாட்சம் அவர்கள் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், தலைமை குற்றவியல் நீதிபதி திருமதி ஜெ.மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி திரு.எஸ்.சிவகடாட்சம் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012ன் கீழ் (POCSO -Prevention Of Children from Sexual Offences) பிரத்யேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று திறந்து வைக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2021 –ஆம் ஆண்டில் போக்சோ வழக்குகள் 228 பதிவாகி இருந்தது. போக்சோ வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்நிலையங்களில் இதுவரை 67 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகள் இதுவரை பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை மகளிர் விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த வழக்குகளின் எண்ணிக்கை 258 ஆக உள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள (POCSO -Prevention Of Children from Sexual Offences) பிரத்யேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்குகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் போக்சோ வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட உள்ளது என பேசினார்.

இவ்விழாவில், முதன்மை சார்பு நீதிபதி திருமதி என்.எஸ்.மீனாசந்திரா, சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.