Close

Polling materials collector inspection

Publish Date : 16/02/2022
.

..

செ.வெ.எண்:-36/2022

நாள்:16.02.2022

வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்கள் தயார்படுத்தும் பணி – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் தேவையான பொருட்கள் தயார்படுத்தும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் இன்று(16.02.2022) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் தயார்படுத்தும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கை மற்றும் அறிவுரைகளின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை, கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான நிலையான இயக்கு செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெறுகிறது. அதற்காக திண்டுக்கல் மாநகராட்சியில் 183 வாக்குச்சாவடிகள், கொடைக்கானல் நகராட்சியில் 38 வாக்குச்சாவடிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 31 வாக்குச்சாவடிகள், பழனி நகராட்சியில் 71 வாக்குச்சாவடிகள், மாவட்டத்தில் மொத்தமுள்ள 23 பேரூராட்சிகளில் 421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களான, அடையாளம் காட்டும் குறி இரப்பர் முத்திரை, மையொற்றும் பெட்டகம், தீப்பெட்டி, அழியாத மை வைப்பதற்கான கிண்ணம், எண்ணெய் முதலியவற்றை துடைத்து எடுப்பதற்கான துணி, கொண்டை ஊசி 12, பென்சில் 2, ஒருமுனை பேனா(ஊதா) 3, குண்டூசிகள் 20, மெல்லிய முறுக்கு நூல் 10 மீட்டர், முத்திரை அரக்கு 2, கரிமத்தாள்கள் 10, வாக்குப்பதிவு பகுதயினைக் குறிக்கும் அறிவிப்பு, பிளேடு, உள்ளே தமிழ், வெளியே தமிழ், பசை, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான அடையாள அட்டைகள், மெழுகுவர்த்திகள் 4, ஒட்டுப்பசை, சணல் கயிறு, இரும்பு ஸ்கேல் 1, முகக்கவசம் போஸ்டர், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உலோக முத்திரை, வாக்குச்சீட்டுகளில் அடையாளமிடுவதற்கான அம்புக்குறி இரப்பர் முத்திரை ஆகிய 25 பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அனுப்புவதற்காக தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களான வெப்பமானி, கை சுத்திகரிப்பான், முகக்கவசம், கையுறைகள், முழு கவச உடைகள், வாக்காளர்களுக்கான கையுறைகள், பஞ்சு மற்றும் குப்பை வாளிகள் உள்ளிட்ட 13 பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பும் தயார் நிலையில் உள்ளன என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம் உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் உடன் இருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.