Close

Pongal gift -collector inspection

Publish Date : 11/01/2022
.

.

செ.வெ.எண்:-29/2022

நாள்:11.01.2022

நியாயவிலைக்கடைகளில் பொங்கள் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.01.2022) நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். திண்டுக்கல் நேருஜி நகர், 9-வது குறுக்கு தெரு, கிழக்கு கோவிந்தாபுரம், முரகன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள நியாயவிலைக் கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கீழ்காணும் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி பருப்பு 50 கிராம், உலர் திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், மிளகாய்த்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், துணிப்பை ஒன்று, முழுக் கரும்பு ஒன்று என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,035 நியாயவிலைக் கடைகளில் உள்ள 6,69,440 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2022 முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தப்பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் குறித்த இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொருட்களின் தரம், எடையளவு உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றவுடன் அனைத்து பொருட்களையும் சரிபார்த்து எடுத்துச் செல்ல வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள், குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 0451-2460097 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு அலுவலக வேலைநாளில் வேலை நேரத்தில் புகார்கள் அளிக்கலாம் என மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.வீ.செந்தில்குமார் உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.