Close

Press tour-Collector inspection

Publish Date : 15/12/2021
.

.

செ.வெ.எண்:-39/2021

நாள்:15.12.2021

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், அணைப்பட்டி, அ.வெள்ளோடு ஊராட்சிகளில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள்
செய்தியாளர் பயணத்தில் தகவல்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் அணைப்பட்டி, அ.வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம், ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பட்டி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.26.28 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்துள்ளது. இதன்மூலம் 313 தனிநபர் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் தண்ணீர் கிடைக்கும் அளவு மற்றும் பகிர்மானம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அணைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி, அதன் பயன்பாடு, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள், குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அ.வெள்ளோடு ஊராட்சியில் பாரத பிரதமரின் குடியிருப்பு திட்டம், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் கட்டுமான பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், ஆட்டுக்கொட்டகை மற்றும் தனிநபர் உறுஞ்சுகுழி பணிகள் என மொத்தம் ரூ.82 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் அணைப்பட்டி, அ.வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர்(ஊ.வ.), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.