Close

Press Tour – solid waste management

Publish Date : 27/10/2021
.

செ.வெ.எண்:-61/2021

நாள்:-27.10.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 டன் இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது–
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தலின்படி, மேற்கொள்ளப்பட்ட செய்தியாளர் பயணத்தில் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தலின்படி, செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருமதி ரா.மனோரஞ்சிதம், தெரிவித்ததாவது:-

தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக, விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில், சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 23 பேரூராட்சிகள் உள்ளன. இப்பேரூராட்சிகளில் மொத்தம் 363 வார்டுகள் உள்ளன. இதன் பரப்பளவு 425.43 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப்பேரூராட்சிகளின் தற்போதைய மக்கள் தொகை 3,72,470 ஆகும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் முதற்கட்டமாக பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினரால் தள்ளு வண்டிகள் மூலம் நாள்தோறும் சராசரியாக 40.39 டன் மக்கும் கழிவுகள் மற்றும் 21.840 டன் மக்காத கழிவுகள் என தரம் பிரித்து பெறப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக தள்ளு வண்டிகள் மூலம் பெறப்பட்ட திடக்கழிவுகளை பேரூராட்சிகளுக்குச் சொந்தமான டிராக்டர்கள், லாரிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு இரண்டு கட்டங்களாக பெறப்படும் கழிவுகள் பேரூராட்சிக்குச் சொந்தமான வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இங்கு மக்காத குப்பைகளில் இருந்து பெறப்படும் கரும்பு சோகைககள் மற்றும் வாழை சோகைகள், எளிதில் மக்குவதற்கு ஏதுவாக தூளாக்கும் இயந்திரம் மூலம் சிறுசிறு துகள்களாக வெட்டப்பட்டு, மக்கும் குப்பையுடன் சேர்த்து உரத்தாக்கு அமைக்கப்படுகிறது. மக்கும் கழிவுகளை கொண்டு உரத்தாக்குகளாக அமைக்கப்பட்டு, அத்தாக்குகளின் மீது EM1 திரவம், வெல்லம் கரைசல் மற்றும் சாணக்கரைசல் தெளிக்கப்பட்டு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தாக்குகள் பிரிக்கப்பட்டு, 45 நாட்கள் முடிவில் அத்தாக்குகள் இயற்கை உரமாக மாறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 23 பேரூராட்சிகளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 டன் இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது. தயார் செய்யப்பட்ட இயற்கை உரத்தினை மண்புழு உரத்தொட்டிகளில் நிரப்பி, மண்புழு உரம் தயார் செய்யப்படுகிறது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட இயற்கை உரம் குறைந்த விலையில் ஒரு கிலோ ரூ.1ஃ- வீதமும், மண்புழு உரம் ஒரு கிலோ ரூ.3/- வீதமும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மக்காத கழிவுகளை பொறுத்தவரையில் பிளாஸ்டிக் கழிவுகளை பிளாஸ்டிக் தூளாக்கும் இயந்திரம் மூலம் சிறுசிறு துகள்களாக வெட்டப்பட்டு, தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி நிதி திட்டம் மூலம் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதர பொருட்களான கண்ணாடி பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், தோல் பைகள், தென்னை சிரட்டைகள் ஆகியவை மறுசுழற்சி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் பேரூராட்சிக்கு வருவாய் ஈட்டப்படுகிறது.

வத்தலக்குண்டு மற்றும் சின்னாளபட்டி பேரூராட்சிகளில் துணிக்கடைகளில் இருந்து பெறப்படும் வெட்டுத்துணிகளை கொண்டு வளம் மீட்பு பூங்காவில், மிதியடி, கைப்பை போன்ற பொருட்கள் பேரூராட்சி பணியாளர்களால் தயாரிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து பேரூராட்சிகளின் வளம் மீட்பு பூங்காவில், உரம் தயாரிக்கும் இடத்தினை சுற்றி துர்நாற்றம் வீசாமல் இருக்க முள்ளில்லா மூங்கில் மரக்கன்றுகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வளம் மீட்பு பூங்காவினை அழகுப்படுத்தும் விதமாக, பூச்செடிகள், பழவகை மரக்கன்றுகள் மற்றும் காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை வளம் மீட்பு பூங்காவில் பணிபுரியும் சுயஉதவிக் குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், வீடுகள் அளவில் இயற்கை உரம் தயாரிக்க, மண் பானையில் இயற்கை உரம் தயார் செய்வதற்கு குடியிருப்புதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் 2016-ன் விதிகளை முழுமையாக கடைப்பிடித்து பேரூராட்சிப் பகுதிகளை குப்பை இல்லா நகரமாக உருவாக்கிடவும், பொதுமக்களிடையே நன்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வரப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சிகளாக திகழ்கிறது. இப்பணிகளை தினசரி தொடர்ந்து செய்து வருவதை பேரூராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிப்பும் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருமதி ரா.மனோரஞ்சிதம், தெரிவித்தார்கள்.

இந்நிகழிவின்போது, உதவி செயற்பொறியாளர் திரு.ஆ.இசக்கி உட்பட துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,திண்டுக்கல்.