Protection of Children
செ.வெ.எண்:- 27/2019 நாள்:- 20.03.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
குழந்தைகள் நலனை பிரதானமாகக் கொண்டு, பாலின வித்தியாசமின்றி, 18 வயதிற்கு கீழ் உள்ள அனைத்துக் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாலின குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது, இந்தியாவில், பாலியல் குற்றங்களிலிருந்து பாலின வித்தியாசமின்றி, 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுறுக்கமாக போக்ஸோ சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இச்சட்டம் வரும் முன், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.
ஆனால், தற்போது 18 வயதுக்குக் கீழ் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்ஃ வன்முறை, பாலியல் துன்புறுத்தல்ஃசீண்டல், ஆபாசப் படமெடுக்க குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இச்சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில், 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்திற்குள் வழக்கு முடிய வேண்டும். தண்டனை நிரூபணம் ஆகும்பட்சத்தில் சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கிடைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.
இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை பாதுகாக்க, சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய போக்ஸோ கமிட்டி மூலம் மாவட்ட அளவில் புகார் பெற காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்ற போக்ஸோ சட்டத்தின் கீழ்கண்ட காவல்துறை அலுவலர்களுக்கு கைபேசி வாயிலாகவும், நேரில் அல்லது தபால் மூலம் தொடர்பு கொண்டும் புகார்களை பதிவு செய்யலாம் என்று சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய போக்ஸோ கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும் புகார்கள் தொடர்பாக கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் திருமதி.ஆர்.சுகாஷிணி, தொலைபேசி எண்: 9498104442, 04512461700, காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.ஏ.டி.மோகன்ராஜ் தொலைபேசி எண்: 9798142960, 04512422143 மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.ஜாஸ்மின்மும்தாஜ்; தொலைபேசி எண்: 8300036678, 04512427928 ஆகியோர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.