Close

Pudhumaipenn Scheme – Notification

Publish Date : 24/11/2022

செ.வெ.எண்:-50/2022

நாள்:22.11.2022

திண்டுக்கல் மாவட்டத்தில், புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள மாணவிகள் நவம்பர் 30ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு அல்லது தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் துவங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 2, 3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

தற்போது இவ்வலைத்தலத்தில் (https://www.pudhumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இவ்வலைத்தளத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக 30.11.2022 வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது. மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2, 3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9150056809, 9150056805, 9150056801 மற்றும் 9250056810 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மேல் படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின்கீழ் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.