Close

Rain water Harvesting Structures-collector inspection

Publish Date : 17/11/2021
.

செ.வெ.எண்:-40/2021

நாள்:17.11.2021

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நிலக்கோட்டை வட்டம், சின்னமநாயக்கன்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு அமைக்கப்பட்டு வரும் பணிகளை, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சின்னமநாயக்கன்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு அமைக்கப்பட்டு வரும் பணிகளை இன்று(17.11.2021) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குத் திட்டத்தின்படி, கட்டிட மேற்கூரைகளில் விழும் மழை நீரினை தேக்கி வைத்து உபயோகிக்க, திண்டுக்கல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA District Rural Development Agency)யின் கீழ், மாவட்ட முழுவதும் 600 மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்புகள் (Roof – Top Rain Water Harvesting Structures) அமைக்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் “புதிய உலக சாதனை” 21 நாட்களில் 600 எண்ணிக்கையில் சேமிப்பு தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 445 கிராமங்களில் அரசாங்கக் கட்டிடங்கள், அரசுப் பள்ளிகளில் 21 நாட்களில் அதாவது, 30.11.2021-ஆம் தேதிக்குள் 600 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் உருவாக்கப்படவுள்ளது. அதன்படி, சின்னமநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் 4,625 சதுர அடி பரப்பில் 18,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படுகிறது.

நாம் வாழ்கின்ற பூமித்தாய்க்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்திலும், பசுமை மற்றும் இயற்கையோடு மனித குலம் ஒன்றி வாழ வீணாகும் மழை நீரினை 100 சதவீதம் நமக்கு தேவையான விதத்தில் எவ்வாறு உபயோகிக்கலாம் என்கிற விழிப்புணர்விற்காகவும், தமிழ்நாடு அரசின் உறுதுணையோடு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாபெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, நூத்தலாபுரத்தில் கிராம சேவை மைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின்போது, நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஆர்.கிருஷ்ணன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்;, திண்டுக்கல்.