Close

Road Safety Awareness and School’s Vehicle Driver’s Medical Camp

Publish Date : 28/05/2019
1

2 3

செ.வெ.எண்:-25/2019 நாள்:28.05.2019
திண்டுக்கல் மாவட்டம்

சாலைவிதிகளை கடைபிடித்து, விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு, ஓட்டுநர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து தகவல்:-

திண்டுக்கல் சேம்பர் ஆப் காமர்ஸ் மண்டபத்தில் இன்று (28.05.2019) சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

சாலைவிதிகளை பின்பற்றி, விபத்துக்களை தவிர்ப்பதற்கென, தமிழக அரசு பொதுமக்களுக்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்கள் குழந்தைகளின் நலன் மற்றும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் கருத்தில் கொண்டும் சாலைவிதிகளை கடைபிடித்து, சாலைகளில் மிகவும் கவனமாக பேருந்துகளை இயக்க வேண்டும்.

மேலும், சாலைகளில் நிறுவப்பட்டுள்ள அடையாள குறி விளக்கு (Signal) மற்றும் வேகத்தை குறைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள தடுப்பான்கள், ஒளிர்விளக்குகள் உள்ளிட்டவைகளை கவனித்து, அதன்படி வாகனங்களை இயக்கி, சாலை விபத்துக்களை தவிர்க்க வேண்டும். ஓட்டுநர்கள் ஒவ்வொருவரும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் சாலைவிதிகளின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்து, சாலை விபத்துகளை தவிர்ப்பதற்கு தங்களது பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மாவட்டத்தில்; அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அதில் முன்னெச்சரிக்கையாக விபத்துக்களை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில்லா மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்கிடும் வகையில் மாவட்டத்தில் அதிக விபத்து ஏற்படும் பகுதிகளில் வேகக்கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்;டு, விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாலை விதிகளை கடைபிடிப்பதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுவதையும் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு அளித்து சாலைவிதிகளை பின்பற்றி, விபத்தில்லாத பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்களின் உடல் நலன் கருதி, அவர்களின் உடல் நலத்தை பேணிக்காக்கும் பொருட்டு, மருத்துவ முகாம் நடத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இன்றையதினம் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடச்சந்தூர், வத்தலகுண்டு ஆகிய பகுதிளில் உள்ள பள்ளிகளைச் சார்ந்த வாகன ஓட்டுநர்கள் 250க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ முகாமின் மூலம் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ECG மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இம்மருத்துவ முகாமில், 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகன ஓட்டுநர்கள் தாமாகவே முன்வந்து இரத்த தானம் வழங்கியது பாராட்டுக்குரியதாகும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆனந்த், துணை காவல் கண்காணிப்பாளர், திண்டுக்கல் திரு.ஏ.திருமலைக்குமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.மாலதிபிரகாஷ் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்