Road Safety Meeting

செ.வெ.எண்:39/ 2019 நாள்:- 12.07.2019
திண்டுக்கல் மாவட்டம் சாலை பாதுகாப்பு தொடர்பான அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (12.07.2019) சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
இன்றைய நவீன உலகில் வாகனம் ஓட்டுவது என்பது இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய விபத்துகள் பெரும்பாலானவை சாலைகளில் நடக்கிறது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு அலுவலர்கள் வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக தலை கவசம் அணிந்திருக்க வேண்டும். அரசு அலுவலர்கள் பொதுமக்களுக்கு ஒரு முன்உதாரணமாக இருக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சாலையில் வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனமாக ஓட்ட வேண்டும். கார் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். மேலும், சாலைகளில் அதிக வேகமாக வாகனம் இயக்குவதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான விபத்துக்கள் மற்ற வாகனங்களை முந்தி செல்லும் போதுதான் விபத்து ஏற்படுகிறது. முறையாக போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பின் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம்.
வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டும் முன் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் கருத்தில் கொள்ள வேண்டும். வாகனத்தை இயக்கும் போது கைபேசி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டிகள் அரசின் விதிமுறைகளின்படி வாகனங்களை இயக்குகிறார்களா என்பதனையும், ஒட்டுநர் உரிமம் மற்றும் வாகன காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை சரிவர புதுப்பித்துள்ளார்களா என்று சரிபார்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல், மாவட்ட ஆட்;சியர் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ராஜ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆனந்த் மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்