Close

Scholarship-CM fund

Publish Date : 17/12/2021

செ.வெ.எண்:-49/2021

நாள்:17.12.2021

முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, ஒருமுறை ஊக்கத்தொகையாக ரூ.50,000 நிதியுதவி பெற மருத்துவம், இணை மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட தொழிற்கல்வி பயிலும் தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மருத்துவம், இணை மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட தொழிற்கல்வி பயிலும் வறிய நிலையில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு முறை ஊக்கத்தொகையாக ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஒற்றை சாளரமுறையில் தொழிற்கல்வி படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றவர்கள் நிதியுதவி பெற தகுதியானவர்கள் அல்ல. தமிழ்நாட்டினை வசிப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதியான மாணவ, மாணவிகள், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதற்கான வசிப்பட சான்று (வட்டாட்சியரிடம் பெறப்பட வேண்டும்), குடும்ப தலைவரின் ஆண்டு வருமான சான்று, குடும்ப உறுப்பினர்களின் வயது, கல்வித்தகுதி, வருமான விபரங்கள் அடங்கிய விபர பட்டியல், ஒற்றை சாளமுறையில் சேர்க்கை பெற்றதற்கான உத்தரவு, இருப்பிடச் சான்று ஆகிய ஆவணங்களின் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் அத்தாட்சி செய்யப்பட்ட நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சித்தலைவர், திண்டுக்கல் அல்லது தாங்கள் கல்வி பயிலும் கல்வி நிறுவன தலைவர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு மேற்கண்டவாறு நிதியுதவி வழங்கப்படும். தகுதியான மாணவ, மாணவிகள் அரசின் இத்திட்டத்தை சிறந்த முறையில் நிதியுதவி பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.