School Reopen

செ.வெ.எண்:-04/2025
நாள்:-02.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு அரசின் விலையில்லா பொருட்களான பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1.65 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று(02.06.2025) திறக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு அரசின் விலையில்லா பொருட்களான பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

.

.

.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் திட்டங்களை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொண்டு சென்று சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் பணியை சென்னையில், இன்று(02.06.2025) தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ்நாடு அரசின் விலையில்லா பொருட்களான பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 2 ஜோடி சீருடைகள், புத்தகப் பைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் 62,646 மாணவ, மாணவிகள், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் 83,564 மாணவ, மாணவிகள், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் 19,115 மாணவ, மாணவிகள் என மொத்தம் சுமார் 1.65 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.நாகேந்திரன், திருமதி வெற்றிச்செல்வி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.