School RTE
செ.வெ.எண்:-55/2022
நாள் 20.04.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள 193 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2,386 இடங்கள் RTE 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 பிரிவு 12(1) (c) ன்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் (பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களின் குழந்தைகள்) குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG / 1 Std) குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள 193 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2,386 இடங்கள் RTE 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைவிதிகள்- 2011 விதி எண் 4 (1)ன் படி பள்ளியிலிருந்து 1 கி.மீக்குள் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.இணையதளம் மூலம் விண்ணப்பிக்க சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 20.04.2022 முதல் 18.05.2022 வரை பெற்றோர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
இம்மாணவர் சேர்க்கைக்காக தேவையான ஆவணங்கள், குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் , இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை.மேலும் சார்ந்த தனியார் சுயநிதிப் பள்ளிகள்/ முதன்மைக்கல்வி அலுவலர்/ மாவட்டக்கல்வி அலுவலர்/ வட்டாரக்கல்வி அலுவலர்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பெற்றோர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்இ திண்டுக்கல்.