School Vehicle’s Collector Inspection

Publish Date : 16/05/2019
1

3 2

செ.வெ.எண்:-13/2019 நாள்:16.05.2019
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 264 பள்ளிகளைச் சார்ந்த 670 பள்ளி வாகனங்கள் ஆய்வு.

பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள்; ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (16.05.2019) திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம் மற்றும் வத்தலக்குண்டு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது.

விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்க உள்ளதால், பள்ளிக்கூடங்களில் பயிலும் குழந்தைகளை அழைத்துச்செல்லும் பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் உரிய முறையில் கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பள்ளி வாகனங்களில் பிரேக் திறன், டயர்களின் நிலை, வாகனத்தின் படிக்கட்டுகள், இருக்கையின் கீழ்புறம் மற்றும் உட்புறம் தரைப்பலகை நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்தும் அவசரகால கதவு சரியான முறையில் பொருத்தப்பட்டு, இயங்குகிறதா என்பது குறித்தும், ஜன்னல்கள், வாகனத்தின் கதவுகள் இயங்கும் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அவசரகால நிலையில் முதலுதவி பெட்டியில் உள்ள மருந்து பொருட்கள் காலவதியானாதா என்பது குறித்தும், தீயணைப்பு கருவி முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறு குறைபாடுகள் உடைய சில வாகனங்கள் கண்டறியப்பட்டது. அந்த குறைபாடுகளை உடனடியாக சரிசெய்து மறுஆய்வு செய்யவும் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாலைவிதிகளின்படி, அதிக வேகமாகவும், கைப்பேசி பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்குவது உள்ளிட்டவைகள் மோட்டார் வாகன சட்டவிதிகளின்படி குற்றமாகும். இதுகுறித்து பொதுமக்கள் புகார் மற்றும் தகவல் தெரிவிப்பதற்கு ஏதுவாக பேருந்தின் பின்புறத்தில் பள்ளியின் தொடர்பு எண் மற்றும் அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலைய எண், வட்டாரப்போக்குவரத்து அலுவலக எண் ஆகியவற்றை கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும். மேலும் அனைத்து வண்டிகளிலும் பின்புறம் சிவப்பு கலர் ஒளிர்பட்டை (Sticker) ஒட்டியிருக்க வேண்டும் என்ற அனைத்து பள்ளி வாகனத்தின் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளி வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகளை அழைத்துச்செல்லும் பேருந்துகளில் இருக்கும் உதவியாளர்களுக்கு அவசரகால நிலை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களால் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் மூலமாக திண்டுக்கல்லில் உள்ள 119 பள்ளிகளைச் சார்ந்த 259 பேருந்துகளும், வேடசந்தூர் பகுதியில் உள்ள 20 பள்ளிகளைச் சார்ந்த 69 பேருந்துகளும், வத்தலக்குண்டு பகுதியில் உள்ள 83 பள்ளிகளைச் சேர்ந்த 117 பேருந்துகளும், நத்தம் பகுதியில் 10 பள்ளிகளை சார்ந்த 25 வாகனங்கள் என ஆகமொத்தம் 470 பள்ளிகளைச் சேர்ந்த 465 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று பழனி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் மூலமாக பழனி ஒட்டன்;சத்திரம்; என மொத்தம் 32 பள்ளிகளைச் சேர்ந்த 200 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 264 பள்ளிகளைச் சேர்ந்த 670 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டுள்ள பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம், பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளும் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒரு பள்ளி வாகனத்தை இயக்கி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.ஜீவா, வட்டாரப்போக்குவரத்து அலுவலர் திரு.கே.ஆனந்த் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள்; ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்