Close

School Vehicle’s Inspection

Publish Date : 02/11/2021
.

.

செ.வெ.எண்:-06/2021

நாள்:02.11.2021

பள்ளி வாகனங்களில் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து 718 பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயங்காத நிலையில், தற்போது கொரோனா பரவல் வேகம் குறைந்து, கட்டுக்குள் இருப்பதையடுத்து, கல்வி நிறுவனங்கள் தமிழக அரசு அறிவுரைப்படி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, பள்ளி வாகனங்களில், தமிழ்நாடு மோட்டார் வாகன (பள்ளி வாகனங்கள் முறைமைபடுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள் 2012, விதிமுறைகள் உரிய முறையில் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார போக்குவத்து அலுவலக மைதானத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகியவற்றுடன் இணைந்து இன்று(02.11.2021) பள்ளி வாகனங்களை கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.

பள்ளி வாகனங்களில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் கூட்டாய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது:-

பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கூடங்களில் பயிலும் குழந்தைகளை, அழைத்துச்செல்லும் பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் உரிய முறையில் கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பள்ளி வாகனங்களில் பிரேக் திறன், டயர்களின் நிலை, வாகனத்தின் படிக்கட்டுகள், கதவுகள், ஜன்னல்கள், அவசரகால வழி, இருக்கையின் கீழ்புறம் மற்றும் உட்புறம் தரைப்பலகை நல்ல நிலையில் உள்ளதா, இருக்கைகள், வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்பு கருவிகள், முதலுதவிப்பெட்டி, சிசிடிவி கேமரா ஆகியவை குறித்தும் அவசரகால கதவு சரியான முறையில் பொருத்தப்பட்டு, இயங்குகிறதா என்பது குறித்தும், ஜன்னல்கள், வாகனத்தின் கதவுகள் இயங்கும் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அவசரகால நிலையில் முதலுதவி பெட்டியில் உள்ள மருந்து பொருட்கள் காலாவதியானதா என்பது குறித்தும், தீயணைப்பு கருவி முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சாலைவிதிகளின்படி, அதிக வேகமாகவும், கைப்பேசி பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்குவது உள்ளிட்டவைகள் மோட்டார் வாகன சட்டவிதிகளின்படி குற்றமாகும். இதுகுறித்து பொதுமக்கள் புகார் மற்றும் தகவல் தெரிவிப்பதற்கு ஏதுவாக பேருந்தின் பின்புறத்தில் பள்ளியின் தொடர்பு எண் மற்றும் அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலைய எண், வட்டாரப் போக்குவரத்து அலுவலக எண் ஆகியவற்றை கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளி வாகனத்தின் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 718 பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டுள்ள பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், தீயணைப்புத்துறையினர் சார்பில் நடைபெற்ற தீத்தடுப்பு முறைகள் செயல்விளக்கம் நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன்,இ.கா.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு.டி.வெங்கட்ரமணன், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.பி.சுரேஷ், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திண்டுக்கல் திரு.இளங்கோ, நத்தம் திருமதி மோகனபிரியா, வேடசந்தூர் திரு.சண்முகஆனந்த், வத்தலகுண்டு திரு.செல்வம், ஒட்டன்சத்திரம் திரு.ஸ்ரீதர், பழனி திரு.ஈஸ்வரன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.