Close

Self Help Group – Sanitary Liquid Preparation – Collector Inspection

Publish Date : 30/03/2020
shg

செ.வெ.எண்:-39:2020 நாள்:29.03.2020
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மகளிர் சுயஉதவிகள் மூலமாக கிருமிநாசினிகள் தயாரித்து வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

————————————————————————————————————————————-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்கள். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்துத்துறை அலுவலர்கள் மூலமாக தீவிரமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மகளிர் சுயஉதவிகள் மூலமாக கிருமிநாசினி (sanitizer) மருந்துகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(29.03.2020) ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை அனைத்துத் துறை அலுவலர்கள் மூலமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் மருத்துவ அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு வழங்குவதற்காக முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் போன்ற பொருட்கள் அதிகளவில் தேவைப்படுகிறது. தற்போது தேவை அதிகரித்திருப்பதால் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதை கருத்தில்கொண்டு முகக்கவசம் மற்றும் சானிட்டைசர் ஆகியவை தயாரிப்பதற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள மகளிர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, சுகாதாரப் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தேவையான முகக்கவசம் மற்றும் சானிட்டைசர் போன்ற பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக சானிட்டைசர் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு அதனை தயாரிப்பதற்கான பயிற்சியாளர்கள் முன்னிலையில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் கிருமிநாசினிகள் தயாரித்து வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக அத்தியாவசிய கடைகள், மருந்து கடைகள் போன்றவற்றிற்குச் செல்லும் பொதுமக்கள், இரண்டு நபர்களுக்கு இடையே குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரம் இடைவெளியை (சமுதாய இடைவெளி) கடைப்பிடிக்க வேண்டும். வணிகர்களும் இதனை உறுதி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். அதன்படி நியாயவிலைக் கடைகளில் சமுதாய இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் விநியோகிக்க கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்;டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

இதுமட்டுமில்லாமல், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மற்றும் தமிழக அரசு அவ்வப்போது வழங்கக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகளை, பொதுமக்கள் தவறாது கடைப்பிடித்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் கொரோனா பரவாமல் முழுமையாக தடுக்க இயலும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கே.கவிதா உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-