Sithayankottai – Photo Exhibition

செ.வெ.எண்:-42/2021
நாள்:17.11.2021
சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதோடு 14 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி, மக்களைத் தேடி மருத்துவ திட்டம், ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசாணை பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும், பயணம் செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது, மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப்பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள், மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக புகைப்படங்கள் இடம் பெற்று, பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் திரு.இரா.கோபிநாத் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்