Small Textile Park-Meeting

செ.வெ.எண்:-09/2023
நாள்:-03.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜவுளித்தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(03.11.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஜவுளித்தொழிலை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். தமிழகத்தில் 100 இடங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க திட்டமிட்டு, பல்வேறு மாவட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசினால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், பொருளாதார வளர்ச்சி மேம்படும்.
எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் வர்த்தக கூட்டமைப்பு உள்ளது. இங்கு சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் துணி நூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் மண்டல துணை இயக்குநரை நேரிலோ அல்லது தொலைபேசி எண்-0421 2220095, அலைபேசி எண்கள் -94421 86070 மற்றும் 97501 60503 வாயிலாகவோ தொடர்புகொண்டு விபரங்களை அறிந்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மண்டல துணை இயக்குநர்(துணி நுால் துறை) திரு.சு.இராகவன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரு.கமலக்கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருணாச்சலம், துணி நுால் கட்டுப்பாட்டு அலுவலர் திரு.ப.சுடலை, தமிழ்நாடு நுாற்பு ஆலைகள் அமைப்பு பிரதிநிதி திரு.ஆர்.சி.கோபிநாத் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.