Close

Solid Waste Management – Collector Inspection

Publish Date : 16/07/2019
1

3 2

செ.வெ.எண்:-48/2019 நாள்:16.07.2019
திண்டுக்கல் மாவட்டம்

சின்னாளபட்டி சிறப்பு நிலைபேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவினை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் இன்று (16.07.2019) வளம் மீட்பு பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 23 பேரூராட்சிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் அனைத்து போரூராட்சிகளில் பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர்கள் நியமிக்கப்பட்டு மக்கும் குப்பை மக்காத குப்பைகழிவுகளை தரம் பிரித்து, முதல் கட்டமாக பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் தள்ளுவண்டிகள் மூலம் மக்கும் கழிவுகளை பச்சைநிற கூடையிலும், மக்காத கழிவுகளை வெள்ளைநிற கூடையிலும் பிரித்து பெறப்பட்டு வருகிறது. இப்பணியில் சுகாதார பணியாளர்களும், மகளிர் சுயஉதவி பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு, தள்ளுவண்டிகள், டிராக்டர்கள், மினி லாரிகள் ஆகியவைகள் இப்பணியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு இரண்டு கட்டங்களாக பிரித்து பெறப்படும் கழிவுகளை பேரூராட்ச்சிக்கு சொந்தமான வளம்மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, குப்பைகழிவுகளை மறுசுழற்சி செய்யப்பட்டு உரமாக பயன்படுத்துவதற்கு தனித்தனி கிடங்குகள் அமைக்கப்பட்டு, மண்புழு உரத்தொட்டி, சாணஎரிவாயு தயாரிக்கும் கூடம், பிளாஸ்டிக் வெட்டும் இயந்திரம், துணி கழிவுகளிலிருந்து கால் மிதி தயாரிக்கும் கூடம், மீன், வாத்து வளர்ப்பு கூடம் என பல்வேறு பிரிவுகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.

தயார் செய்யப்பட்ட இயற்கை உரத்தினை மண்புழு உரத்தொட்டிகளில் நிரப்பி 20 நாட்களில் மண்புழு உரம் தயார் செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளில் 16 பேரூராட்சிகளில் மண்புழு உரம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இயற்கை உரம் குறைந்த விலையில் ஒரு கிலோ ரூபாய் 1 வீதமும், மண்புழு உரம் 1 கிலோ ரூபாய் 3 வீதமும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், அனைத்து பேரூராட்சிகளிலும் வளம்மீட்பு பூங்காவில் உரம் தயாரிக்கப்படும் இடத்தினை சுற்றி துருநாற்றம் வீசாமல் இருக்க முள்ளில்லா மூங்கில் மரங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், வளம்மீட்பு பூங்காவினை அழகுபடுத்தும் விதமாக பூச்செடிகள்,பழவகை, மரக்கன்றுகள் மற்றும் காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, பேரூராட்சிப் பகுதிகளில் பெறப்படும் கோழிக் கழிவுகளையும் இந்த வளம்மீட்பு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மீன் வளர்ப்புப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் மீன்களுக்கு உணவாக வழங்கப்பட்டு கோழிக் கழிவுகள் அப்புறப் படுத்தப்பட்டு வருகிறது.

துணிகழிவுகளிலிருந்து கால் மிதிகள் தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டு, பணிபுரியும் பணியாளர்களுக்கு கால் மிதிகளை மகளிர் சுயஉதவிக்குழுவின் மூலம் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்வதற்கு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.குருராஜன், சின்னாளபட்டி பேரூராட்சி செயல்; அலுவலர் திருமதி.கலையரசி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.