Close

Sparsh Leprosy Awareness Campaign

Publish Date : 30/01/2024

செ.வெ.எண்:-64/2024

நாள்:-29.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

‘ஸ்பர்ஷ்’ தொழுநோய் விழிப்புணர்வு முகாம் 30.01.2024 முதல் 13.02.2024 வரை நடத்தப்பட உள்ளது -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 30-ஆம் நாள் ஆண்டுதோறும் தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2017-ஆம் ஆண்டிலிருந்து ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை இரு வார நிகழ்வாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் ‘ஸ்பர்ஷ்’ (SPARSH) தொழுநோய் விழிப்புணர்வு முகாம் 30.01.2024 முதல் 13.02.2024 வரை நடத்தப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கல்வி நிலையங்கள், மாவட்ட, வட்ட மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தொழுநோய் ஒழிப்பு தினம் 30.01.2024 அன்று அனுசரிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றல், தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து 31.01.2024 முதல் 13.02.2024 வரை ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு கூட்டங்கள், தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்கள், தோல் நோய் சிகிச்சை முகாம்கள் செயல்படுத்தப்பட உள்ளன. வாரச்சந்தை கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் தொழுநோய் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளன.

தோலில் காணப்படும் சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல் தொழுநோயின் ஆரம்ப அறிகுறியாகும். தொழுநோயானது மைக்கோ பாக்டீரியம் லெப்ரே (MYCOBACTERIUM LEPRAE) என்னும் கிருமியால் காற்றின் மூலமே பரவுகிறது. தொழுநோயானது கூட்டு மருந்து சிகிச்சை (MULTI DRUG TREATMENT) மூலம் முற்றிலும் குணமாகக்கூடியது. தொழுநோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சை முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. எந்த நிலையிலும் தொழுநோயை குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் ஊனம் வராமல் தடுக்கலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது தொழுநோய் பரவும் விகிதம் (PREVALENCE RATE) 10 ஆயிரம் மக்கள்தொகைக்கு 0.2 என்ற அளவில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை 2027-ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.