Close

Special Kirama Saba (Mullipadi)

Publish Date : 22/06/2019
mul

செ.வெ.எண்:-46/2019

நாள்:22.06.2019

mul2

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பாடி ஊராட்சியில் நீர் மேலாண்மை பணிகள், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் அபராதம் விதிப்பு தொடர்பான மக்கள் பங்கேற்புடன் கூடிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பாடி ஊராட்சியில் நீர் மேலாண்மைபணிகள், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் அபராதம் விதிப்பு தொடர்பான மக்கள் பங்கேற்புடன் கூடிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:-

தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு, பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள், முன்னேற்றங்கள் குறித்து கலந்துரைக்கவும், கிராம சபைக் கூட்டம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது.

மேலும், மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் மழை நீர் பாதுகாப்பு, நீரின் முக்கியத்துவம், பருவகால நிலைமைகள் தொடர்பாக சிறப்பு கிராம சபைக் கூட்டம் மற்றும் சிரமதானம் (Shirmadaan) மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில் இன்றைய தினம் சிறப்பு கிராம சபைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், அந்தந்த ஊராட்சிகளில்; நீர் மேலாண்மை பணிகள், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் அபராதம் விதிப்பு தொடர்பான மக்கள் பங்கேற்புடன் கூடிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும்,

1.மழை நீரை சேமிப்பதற்கான அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சிறு குளங்களை வெட்டுதல்.சுத்தம் செய்தல்.

2.மரம் நடுதல் திட்டத்தினை அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்துதல்.

3.பொது சேமிப்பு தொட்டிகள் அல்லது வீட்டு உபயோக தொட்டிகள் மழை நீருக்காக நிறுவப்படுதல்.

4.நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும் மற்றும் உள்நாட்டு விவசாய பயன்பாட்டிற்காவும், வீட்டின் அருகில் சிறிய குளங்களை அமைத்தல்.

5.நீர் பாதுகாப்பு குறித்த பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாங்களை மேற்கொள்ளுதல்.

6.அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் அனைத்து பள்ளிகள் மூலம் மழை நீர் பாதுகாப்பு தொடர்பான பாடல்கள், தெரு நாடகங்கள், நடன நிகழச்சிகளை ஊக்குவித்தல்.

7.பொது இடங்களில் சுவர் ஓவிங்கள் மூலம் நீர் சேகரிப்பினை அமல்படுத்துதல். போன்றவைகள் குறித்து இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பொதுமக்கள் திறந்த வெளிமலம் கழிப்பதை தவிர்க்கும் வகையில், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கும், கட்டி முடிக்கப்பட்ட தனிநபர் கழிப்பிடத்தினை சுகாதாரமான முறையில் பயன்படுத்தவதற்கும், பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்தி, சுகாதாரமான ஊராட்சியாக உருவாக்கிடவும், குப்பைகளை தூய்மை காவலர்களை கொண்டு அப்புரப்படுத்தவும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி, தங்களது கிராமத்தினை பிளாஸ்டிக் மாசில்லா கிராமமாக உருவாக்குவதற்கு தங்களது பங்களிப்பை ஒவ்வொருவரும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும், தங்களது பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளுக்கு, தங்களது பகுதிகளை சார்ந்த அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு மனுக்கள் அளித்து பயன்பெறலாம். தீர்வு ஏற்பாடாத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி.கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கருப்பையா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,