Special KPT – Notification
செ.வெ.எண்:-62/2025
நாள்:-17.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், சி.அம்மாப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் 18.06.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு முழுவதும் 2024-25ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 4656 எண்ணிக்கையிலான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 12 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 168 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடத்தப்படவுள்ளது.
இம்முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை பரிசோதனை, அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திற்கான முகாம்களை துவக்கி நடத்திடும் பொருட்டு, துவக்க விழாவாக குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.அம்மாப்பட்டி கிராமத்தில் 18.06.2025 அன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து கிராம ஊராட்சிகளை சார்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இம்முகாமில் பங்கேற்று தங்களது கால்நடைகளுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அத்தியாவசிய சிகிச்சைகளை பெற்று பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.