Close

Success story – CMCHIS

Publish Date : 22/10/2021

..

திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா பேரிடர் காலத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுத்தல் என தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லத்திற்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்குவதற்காக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதேபோல், தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவார்கள்.

உயிர் காக்கும் மருத்துவ கிசிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் உயிர்காக்கும் உயர் கிசிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் தொடங்கப்பட்டது. பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கொரோனா சிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 985 நோயாளர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். சிகிச்சை பெற்றவர்களுக்காக ரூ.10,23,64,460/- (பத்து கோடியே இருபத்து மூன்று இலட்சத்து அறுபத்து நான்காயிரத்து நானூற்று அறுபது மட்டும்) வழங்கப்பட்டுள்ளது.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம், ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கும் குறைவாக இருத்தல் வேண்டும். மேலும், விதவைகள், ஆதரவற்றவர்கள், வயது முதிர்வு ஓய்வு ஊதியம் பெறுபவர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் பதிவு செய்த இலங்கை தமிழர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.

இத்திட்டத்தில் மொத்தம் 1,450 மருத்துவம் மற்றும் 38 பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 154 தொடர் சிகிச்சைகளும், 8 உயர் அறுவை சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் வரைமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், 12 அரசு மருத்துவமனைகளும், 41 தனியார் மருத்துவமனைகளும் இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2021-2022-ம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் இதுவரை(18.10.2021) 2294 நோயாளர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக, ரூ.2,28,44,465/- (ரூபாய் இரண்டு கோடியே இருபத்து எட்டு இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்து நானூற்று அறுபத்து ஐந்து மட்டும்) வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவனைகளில் 5,783 நோயாளர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக ரூ.18,65,71,171/- (ரூபாய் பதினெட்டு கோடியே அறுபத்து ஐந்து இலட்சத்து எழுபத்து ஓராயிரத்து நூற்று எழுபத்து ஒன்று மட்டும்) வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், 4,88,498 குடும்பங்களுக்கு முதலமைச்சரின் விரிவின மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கூம்பூர் ஊராட்சி, சின்னப்புதூரைச் சேர்ந்த திரு.கு.கந்தசாமி(வயது 75) என்பவர் தெரிவித்ததாவது:-

நான், விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக கால் மூட்டு வலி இருந்து வந்தது. அதற்காக பல இடங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தேன். 4 மாதங்களுக்கு முன்னர் நடக்க முடியாத அளவிற்கு கால் மூட்டில் வலி ஏற்பட்டது. உடனே, திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றேன். அப்போது, கால் மூட்டில் தேய்மானம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது, எனவே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். விவசாய கூலி வேலை செய்து வந்த எனக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு பண வசதி இல்லை. உடனே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற உறவினர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

அதன்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில், எனது வலது காலில் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். தற்போது, வலி குறைந்து நடக்க முடிகிறது. இத்தகைய சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு திரு.கு.கந்தசாமி தெரிவித்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் ஊராட்சி, சாமியார்பட்டியைச் சேர்ந்த திரு.தேவராஜ் என்பவர் மகன் திரு.தே.நாகேந்திரன்(வயது 41) என்பவர் தெரிவித்ததாவது:-

நான், விவசாய கூலி வேலை செய்து வருகிறது. அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். கடந்த மாதம் எனக்கு திடீரென்று இதயத்தில் வலி ஏற்பட்டது. உடனடியாக திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள், என்னை பரிசோதனை செய்த பின்னர் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். உடனே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் எனக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, நலமாக உள்ளேன். என்னைப்போன்ற ஏழை கூலித்தொழிலாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஏழைகளை பாதுகாக்கும் வகையில் மருத்துவத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு திரு.தே.நாகேந்திரன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி வட்டம், கோம்பைப்பட்டி ஊராட்சி, அய்யாப்பட்டியைச் சேர்ந்த திரு.மூ.ராமகிருஷ்ணன்(வயது 70) என்பவர் தெரிவித்ததாவது:-

நான், விவசாய கூலித்தொழிலாளி. தினமும் கூலி வேலைக்குச் சென்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். எனக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே, நான் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பின்னர் எனக்கு சிறுநீரக கோளாறு இருப்பது தெரிவந்தது. அதற்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் முழுமையாக சிகிச்சை பெற்றேன். அதனைத்தொடர்ந்து, வாரத்திற்கு 2 நாட்கள் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானம், குடும்ப செலவுக்கே சரியாகிவிடும் நிலையில், டயாலிசிஸ் போன்ற தொடர் சிகிச்சைகள் மேற்கொள்வது எங்களைப்போன்ற கூலித் தொழிலாளர்களுக்கு முடியாத செயல். ஆனால், ஏழை, எளிய மக்களை பாதுகாக்கும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது, எங்களைப் போன்ற தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றும் வகையில் உள்ளது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு திரு.மூ.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஏழை, எளியோர்கள் மருத்துவ ரீதியாக சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரருகிறார்கள். தமிழக மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி, அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்தோர்களுக்கும் மற்றும் அவர்களின் வருங்கால சந்ததியினரையும் பாதுகாத்து, வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

வெளியீடு
தி.நவாஸ்கான்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திண்டுக்கல் மாவட்டம்.