SVEEP AWARENESS CAMPAIGN

Publish Date : 30/03/2019
1

3 4 5

செ.வெ.எண்:-42/2019 நாள்:-29.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடாமல், குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

24 கல்லூரிகளின் 1010 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய் இ.ஆ.ப., அவர்கள் வழங்கி தகவல்.

திண்டுக்கல் ஜீ.டி.என் கலைக்கல்லூhயில் இன்று (29.03.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள், வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற இறுதி போட்டியில் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி தெரிவித்ததாவது:

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்துள்ள வாக்காளர்கள் அனைவரும், ஒருவர் கூட விடுபடாமல் வாக்களிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, இளைஞர்களாகிய மாணவ, மாணவியர்களின் பங்களிப்பு அதிக அளவில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டி, கவிதை போட்டி, விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு, கடந்த ஒரு வார காலமாக திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, பழனி, நத்தம், ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய 7 வட்டாரங்களுக்குட்பட்ட மொத்தம் 24 கல்லூரிகளை சார்ந்த 1010 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போட்டிகளில் கலந்து கொண்ட 24 கல்லூரிகளை சார்ந்த 289 மாணவ, மாணவியர்கள் இறுதி போட்டிக்கு தேர்வானர்கள்.

கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற ஜீ.டி.என் கல்லூரியில் இன்றைய தினம் நடைபெற்ற இறுதி போட்டியில், தேர்தல் தொடர்பாகவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், நேர்மையான முறையில் வாக்களிப்பது குறித்தும், ஓட்டிற்கு பணம் பெற மாட்டோம் என்பது குறித்தும் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டி, பரத நாட்டியம் உள்ளிட்டவைகளில் முதல் பரிசாக கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் கல்லூரியை சார்ந்த மாணவியர்களும், இரண்டாம் பரிசாக காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தை சார்ந்த மாணவ, மாணவியர்களும், மூன்றாம் பரிசாக ஜீ.டி.என் கலை கல்லூரியை சார்ந்த மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இளைஞர்கள் நமது அடிப்படை கடமைகளில் ஒன்றான, வாக்களித்தலை ஒவ்வொருவரும் கருத்தில் கொண்டு வாக்களிக்கும் வகையில், கல்லூரிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

மேலும், தேர்தல் குறித்த எவ்வித சந்தேகங்களுமின்றி வாக்காளர்கள் வாக்களிக்க வர வேண்டும் என்ற அடிப்படையிலும், குறிப்பாக முதன்முறையாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கிலும் EVM செயல்பாடுகள் குறித்த விளக்கமளிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்சமயம், மின்னணு வாக்குபதிவின் மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதில் ஏற்படும் சந்தேகங்களை களைவதற்கு, தேர்தல் ஆணையத்தின் மூலம் VVPAT இயந்திரம் பயன்படுத்தப்பட்டு, அதன்மூலம் வாக்காளர்களுக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த இயந்திரம் அனைத்து வாக்கு சாவடிகளிலும் பயன்படுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நமது மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்கு சாவடி மையங்களில் VVPAT இயந்திரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும், வாக்காளர்கள் தேர்தல் குறித்த புகார்களுக்கும் மற்றும் சந்தேகங்களுக்கும் E-Vigilance செயலியை பயன்படுத்தி அதன் மூலம் விபரங்கள் அறிந்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறுவதற்கு நாம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும்,மாணவ, மாணவியர்கள் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக அந்தந்த கல்வி நிறுவனங்களில் Campus Ambassador நியமிக்கப்பட்டு சந்தேகங்கள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாகவும் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நாளன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்;. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், தேர்தல் பொது பார்வையாளர் திரு.சுதேஷ்குமார் மோக்தா, இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., ஜீ.டி.என் கலைக்கல்லூரி தாளாளர் திரு.இரத்தினம், நிர்வாக இயக்குநர் திரு.துரைகார்திக், கல்லூரி முதல்வர் திரு.வெங்கடாஜலம் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்