மூடு

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வெளியிடப்பட்ட தேதி : 04/10/2021
.

..செ.வெ.எண்:-04/2021

நாள்:02.10.2021

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கதர் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ.137 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது –
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினமான இன்று(02.10.2021) திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் அங்காடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்ட உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டில் 6 கதர் அங்காடிகள், 3 கதர் உற்பத்தி நிலையங்கள், 8 கிராமிய நூற்பு நிலையங்கள், காலணி உற்பத்தி அலகு ஒன்று, சோப்பு உற்பத்தி அலகு ஒன்று, ஜவ்வாது உற்பத்தி அலகு ஒன்று, மாவட்ட கதர் கிடங்கு ஒன்று என மொத்தம் 21 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம் 100 கிராமப்புற பெண்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய திருநாட்டின் இதயமாக விளங்கும் கிராமப்புற ஏழை, எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உயரிய சேவையை முதற்குறிக்கோளாகக் கொண்டு, தமிழ்நாடு கிராமத்தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ.59.81 லட்சம் மதிப்பில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு(2021) அண்ணல் காந்தியடிகளின் 153-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நமது மாவட்டத்திற்கு விற்பனை இலக்காக ரூ.137 இலட்சம் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கதர் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், கதர் விற்பனை அங்காடியில் மத்திய, மாநில அரசுகள் கதர், பட்டு, பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் பொருட்டு, அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து கதர் அங்காடிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் துவக்கப்பட்டுள்ள தற்காலிக கதர் விற்பனை நிலையங்களில் பெருமளவில் கதர் ரகங்கள் வாங்குவதன் மூலம் கிராமப்புற ஏழை, எளிய நூற்போர்கள் மற்றும் நெய்வோர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், பொதுமக்கள் கதர் ரகங்களை வாங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவற்றை அரசு அலுவலர்களும் மற்றும் பொதுமக்களும் வாங்குவதன் மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் மற்றும் நூற்பாளர்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தி நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரிய உதவி இயக்குநர் திரு.சு.முருகேசன், கதர் ஆய்வாளர் திரு.கா.திருச்செல்வம் மற்றும் கதர் வாரிய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.