மூடு

அதிக தொகை கொண்டு செல்லும் போது முறையான ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்

வெளியிடப்பட்ட தேதி : 02/02/2022
.

..

..செ.வெ.எண்:-01/2022

நாள்:-01.02.2022

அதிக தொகை கொண்டு செல்லும் போது முறையான ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(01.02.2022) ஆய்வு மேற்கொண்டார்கள்.

கொடைக்கானல் நாயுடுபுரத்தில் உள்ள புனித சேவியர் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், தேர்தல் பறக்கும் படையினரின் ஆய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து, கொடைக்கானல் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். பின்னர் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க கொடைக்கானல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கை மற்றும் அறிவுரைகளின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-2022 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பணிகள், வாக்குப்பதிவு பணியாளர்களுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன். தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் தேவைக்காக ரூ.50,000-க்கு மேல் அதிக தொகை கொண்டு செல்லும்போது முறையான ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். பறக்கும்படை ஆய்வில் பிடிபட்டால் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது, அந்த தொகை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேரங்காடிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களாக இருக்கும் டாஸ்மாக் நிறுவனம், அறநிலையத் துறை, உணவு பாதுகாப்புத் துறை, பசுமை குழுக்கள், தேசிய பசுமை படை என அனைவரிடமும், ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாதிப்புகளை உருவாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது, உற்பத்தி செய்வது, ஓர் இடத்தில் சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, போக்குவரத்து மூலம் எடுத்துச்செல்வது, விற்பனை செய்வது ஆகியவை தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கும் தன்மையுள்ள இயற்கைக்கு உகந்த மாற்று பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படுவோரின் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாத்தலாமாக இருப்பதால் இங்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் பயன்படுத்திவிட்டு வீசிச்செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை தன்னார்வலர்களை பயன்படுத்தி அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தியப் பின்னர் அழிக்க இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களை அந்த இயந்திரத்தில் போட்டால் அது தூளாக்கிவிடும். அந்த பிளாஸ்டிக் தூள் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. கொடைக்கானலில் 10 கடைகளுக்கு ஒன்று வீதம் பிளாஸ்டிக் பாட்டில் அழிப்பு இயந்திரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அதுதான் மண், நீர், காற்று என எல்லாவற்றையும் சீரழிக்கிறது. பிளாஸ்டிகை மண்ணில் போட்டால் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் மண் கெடுகிறது. மண் கெட்டால் வேளாண்மை பாதிக்கிறது. கால்நடைகளும் இவற்றை தின்று இறந்து போகின்றன. நீர் நிலைகளில் தூக்கி எறிந்தால் அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர் மாசுபடக்கூடிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கடல்சார் உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு மடிந்து போகின்றன. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை எரிப்பதால் அதிலிருந்து டையாக்சின் வேதிப்பொருள் காற்றில் கலந்து, காற்று நஞ்சாகிறது. இதை சுவாசிக்கும் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகள், நுரையீரல் பாதிப்புகள் எற்படுகின்றன.

பிளாஸ்டிக் பொருள்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். அரசு மட்டும் நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., கொடைக்கானல் கோட்டாட்சியர் திரு.ச.முருகேசன், கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஏழுமலையான், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.நாராயணன், கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.அ.முத்துராமன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.