மூடு

உரிய காரணமின்றி வெளியே வருபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை-மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 20/04/2020

செ.வெ.எண்:-45/2020 நாள்:17.04.2020
திண்டுக்கல் மாவட்டம்

உரிய காரணமின்றி வெளியே வருபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லாத நபர்கள் மீது விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறும் நபர்களிடம் இருந்து ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.

————————————————————————————————————————————-

பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தணிக்கும் துறையின் அரசாணைப்படி(எண்.193, நாள்:15.04.2020) கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-ன் கீழ் தமிழ்நாட்டில் 03.05.2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகளில் மளிகைக் கடைகள், தற்காலிக காய்கறி சந்தைகள், பேக்கரிகள் ஆகியவை பிற்பகல் 1.00 வரை இயங்கிட அனுமதி வழங்கப்பட்டு, பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே வீட்டில் ஒரு நபர் வெளியில் சென்று வர வேண்டும். உரிய காரணமின்றி வெளியே வருபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆகியோர்களால் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலத்தில் பொது இடங்களில் செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக இரண்டு அடுக்கு அல்லது மூன்றடுக்கு முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் உபயோகிக்கப்பட்ட முகக்கவசங்களை வெளியிடங்களில் வீசிவிட்டு செல்லாமல், பாதுகாப்பான முறையில் குப்பை சேகரிக்கப்படும் இடத்தில் போட வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லாத நபர்கள் மீது விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டிற்கு வெளியே சென்று வரும் நபர் முறையாக சோப்பினால் கைகளை கழுவ வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் உமிழ்தல் கூடாது. இரு சக்கர வாகனங்களில் ஒரு நபரும், நான்கு சக்கர வாகனங்களில் இரு நபர்கள்(ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில் ஒருவர்) மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதனை மீறும் நபர்களிடம் இருந்து ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும். மேலும், 60 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகள் ஆகியோர் தேவையின்றி வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்திட வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-