மூடு

உலக ஈர நிலங்கள் தினம் புகைப்பட போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 03/02/2022
.

செ.வெ.எண்:-03/2022

நாள்:02.02.2022

உலக ஈர நிலங்கள் தினம் புகைப்பட போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

உலக ஈர நிலங்கள் தினத்தை (பிப்ரவரி-02) முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில், ஈர நிலங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈர நிலங்களை பாதுகாப்பது தொடர்பான புகைப்படப் போட்டி வனத்துறை சார்பில் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(02.02.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் வழங்கி தெரிவித்ததாவது:-

1971-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி எஸ்கண்டர் பெரோஸ் தலைமையில் ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் 18 நாடுகள் கலந்து கொண்டு ஈரநிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் ராம்சார் ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது. மேற்படி ஒப்பந்த நாளான பிப்ரவரி-2 உலக ஈரநில தினமாக கொண்டாடப்படுகிறது.

ஈரநிலங்கள் பூமியின் பச்சை நுரையீரல்கள் என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் சுமார் 27,403 சதுர கிலோ மீட்டர் சதுப்பு நிலப் பரப்புகளாக அமைந்துள்ளது. அதில் சுமார் 3959 சதுப்பு நிலப்பகுதி கடலோர பகுதிகளாக அமைந்துள்ளன. மீதமுள்ள 80 சதவிகித சதுப்பு நிலங்கள் அலையாத்தி காடுகள் பகுதிகளாக உள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை தற்போது சுமார் 50 சதவிகித சதுப்பு நிலப்பகுதிகளே உள்ளது. மீதமுள்ள பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் எண்ணற்ற நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் மற்றும் தாவரங்கள் அழியும் தருவாயில் உள்ளது. பூமி வெப்பமயமாதல், நிலநடுக்கம் மற்றும் பருவகாவங்களில் ஏற்படும் பெருவெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றது.

ஈரநிலங்களை மீட்டெடுக்கும் விதமாக மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் உருவாக்கப்பட்டு அவை ஈரநிலங்களை அடையாளப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

ஈரநிலங்களை பாதுகாப்பதால், நாட்டின் நீர்வளம், பசுமைவளம் மற்றும் மேற்கூறிய பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் பாதுகாவலனாய் செயல்படுவதற்கு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் செல்வங்களின் ஒத்துழைப்பு மற்றும் செயல்பாடுகள் இன்றியமையாதது.

உலக ஈரநில நாளான இன்று(02.02.2022) உலக அளவில் ஈரநிலங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் முக்கிய நோக்கம் பொதுமக்களிடையே ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை அறிய செய்து அவற்றை எவ்வாறு அரசுடன் இணைந்து பாதுகாப்பது குறித்த கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதாகும். எனவே, மாணவச்செல்வங்கள் தங்களது பங்களிப்பு மற்றும் ஈரநிலங்கள் பாதுகாப்பது குறித்து வருங்காலங்களில் விழிப்புணர்வோடு தங்கள் செயல்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., கோட்ட வன அலுவலர் திரு.தி.இளங்கோவன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.