மூடு

ஒட்டன்சத்திரம் காமராஜர் காய்கறி சந்தை வளாக, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5 கோடி மதிப்பில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி அமைக்கும் பணி

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2022
.

..

செ.வெ.எண்:-01/2022

நாள்:02.03.2022

ஒட்டன்சத்திரம் காமராஜர் காய்கறி சந்தை வளாக, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5 கோடி மதிப்பில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி அமைக்கும் பணி – மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று(02.03.2022) அடிக்கல் நாட்டினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காமராஜர் காய்கறி சந்தை வளாகத்தில், உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக 1,000 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட புதிய குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில் ஒட்டன்சத்திரம் காமராஜர் காய்கறி சந்தை வளாகத்தில் இன்று(02.03.2022) நடைபெற்றது.

விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள குளிர்பதன கிட்டங்கிற்கு, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து, 20 பயனாளிகளுக்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களுக்கு அல்லும் பகலும், அயராது உழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். வேறு எந்த மாநிலத்திலும், அறிவிக்காத பல திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும், கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்கள். மேலும், தேர்தல் நேரத்தில் தாம் அறிவித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி, தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விவசாயத்தை ஊக்குவித்து, விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்காக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்ற தனித்துறையை உருவாக்கி, சட்டமன்றத்தில் வேளாண்மைத்துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிவகை செய்துள்ளார்கள்.

பரப்பலாறு அணை தூர்வாருவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. 4 கட்டங்களாக அனுமதி பெற வேண்டிய நிலையில் முதற்கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தக் கட்ட அனுமதி பெற்று பரப்பலாறு அணை விரைவில் தூர்வாரப்படும்.

மழைக்காலங்களில் அமராவதி ஆற்றில் பெருக்கெடுத்துச் செல்லும் தண்ணீரையும், சண்முகாநதியாறு தண்ணீரையும் வீணாகாமல் தடுப்பதற்கு, அமராவதியாறு, பச்சையாறு, குதிரையாறு, பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, நல்லதங்காள்-நங்காஞ்சியாறு, குடகனாறு, சந்தனவர்த்தினியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் பழனி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகள் நீராதாரம் மேம்பாடு அடையும். அதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முருங்கை அதிகம் சாகுபடி செய்யப்படும் திண்டுக்கல், திருப்பூர், கரூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி ஆகிய 7 மாவட்டங்களை ஒருங்கிணைத்து முருங்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. கருப்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க மாண்புமிக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.

அதேபோல், திண்டுக்கல், கரூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், நாகை போன்ற மாவட்டங்களில் கண்வலிக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப்பயிரை அங்கீகரிக்கப்பட்ட பயிராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குளம், ஏரி, வாய்க்கால்களை தூர்வாரி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாய விளைபொருட்கள் உற்பத்தியை அதிகரித்து, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேவையான இடங்களில் குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விளையாட்டு மைதானம் அமைக்கவும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு ரூ.1,030 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றைடையச் செய்வதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியோடு உள்ளார்கள். மக்களுக்கு நன்மைகளை கொண்டு சேர்ப்பதில் தமிழக அரசு உறுதியோடு உள்ளது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

இவ்விழாவில், திண்டுக்கல் வேளாண் விற்பனைக்குழு செயலாளர் திரு.மு.வ.சந்திரசேகர் வரவேற்றார். ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கண்காணிப்பாளர் திரு.சா.அருளானந்தன், மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், திண்டுக்கல் வேளாண் வணிகம் துணை இயக்குநர் திரு.ச.ராஜா, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.