ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கினார்.

செ.வெ.எண்:-52/2022
நாள்:27.03.2022
திண்டுக்கல் மாவட்டம்
ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காமாட்சி திருமண மண்டபத்தில், பயனாளிகளுக்கு பொதுநகைக்கடன் தள்ளுபடி2021 திட்டத்தில் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்குதல், கால்நடை வளர்ப்பிற்கான நடைமுறை மூலதனக்கடன், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி, புதிய குடும்ப அட்டைகள், முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(27.03.2022) நடைபெற்றது. பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்;. திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று, தமிழக மக்களுக்கு அல்லும் பகலும், அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில், சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்;. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு காலத்தில் நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வசதி என பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்கள். ‘உங்கள் தொகுதியில் மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள, அதற்கான தனி அதிகாரியை நியமித்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, எஞ்சிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 60 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டத்தில் தினமும் பயனடைந்து வருகின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வருமுன் காப்போம் திட்டத்தினை மீண்டும் துவக்கி வைத்துள்ளார். மேலும், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் 53 இலட்சம் நபர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதேபோல், விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்கும் வகையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரசு சார்பில் சிகிச்சை அளிக்கும் இன்னுயிர் காப்போம் 48 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சைக்காக ரூ.1 இலட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில், தகுதியானவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை 11 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 36,000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் பகுதியில் மட்டும் 3,619 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தமிழகம் முழுவதும் 5,000 நியாயவிலைக்கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக்கடைகளை பிரிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் முழுநேர நியாய விலைக்கடைகளை பிரிக்கவும், புதிய பகுதி நேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களால் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவித்ததற்கிணங்க, தமிழகத்தில் சுமார் 12 லட்சம் நபர்கள் பயன்பெற்றுள்ளனர். இதன்மூலம், ரூ.6,000 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ.208 கோடி மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 54,600 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் ரூ.20 கோடி மதிப்பிலான கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்தவிழாவில், நகைக்கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகள் 268 பயனாளிகளுக்கும், கால்நடை வளர்ப்பிற்கான நடைமுறை மூலதனக்கடன் 526 பயனாளிகளுக்கும், 28 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி 333 பயனாளிகளுக்கும் என 1,127 பயனாளிகளுக்கு ரூ.4.89 கோடி மதிப்பிலான கடன் திட்ட உதவிகள், 500 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், 350 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை என ஆகமொத்தம் 1,977 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் காமராஜர் காய்கறி சந்தை வளாகத்தில், உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக 1,000 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட புதிய குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை ரூ.25 கோடி மதிப்பீட்டில் நவீன சிகிச்சை வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வாக்களித்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்க தவறிவிட்டோம் என வருத்தப்படும் அளவிற்கு கழக ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்கள். அதன்படி, தமிழகத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில்;, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திரு.ராமகிருஷ்ணன், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், ஒட்டன்சத்திரம் நகராட்சித்தலைவர் திரு.திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு.வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.மு.முத்துச்சாமி, முக்கிய பிரமுகர் திரு.ஜோதீஸ்வரன், தர்மராஜ், செல்வராஜ் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.