மூடு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2021
.

செ.வெ.எண்:-46/2021

நாள்:22.10.2021

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் 91 கிராம ஊராட்சிகளில் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது – தோட்டக்கலை பயிர்களில் உயர் தொழில்நுட்ப சாகுபடி குறித்த பயிற்சி, கருத்தரங்கத்தை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம், காய்கறி மகத்துவ மையத்தில் இன்று(22.10.2021) தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலை பயிர்களில் உயர் தொழில்நுட்ப சாகுபடி குறித்து மாவட்ட அளவிலான 2 நாட்கள் பயிற்சி, கருத்தரங்கத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களில் உயர் தொழில்நுட்ப சாகுபடி பயிற்சி கருத்தரங்கம், ரெட்டியார்சத்திரத்தில் காய்கறி மகத்துவ மையத்தில் 22.10.2021 மற்றும் 23.10.2021 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலைத்தோட்டப்பயிர்கள், சுவைதாழித பயிர்கள், மருத்துவப் பயிர்கள் மற்றும் மலர்கள் ஆகியவை 1.02 லட்சம் எக்டர் பரப்பில் சாகுபடியாகிறது. தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும், உற்பத்தி செய்தவற்றை சந்தைப்படுத்தவும், தரமான மகசூல் மற்றும் அதிக வருவாய் விவசாயிகள் பெற்றிட, விவசாயி;களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திட, திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தோட்டக்கலைப் பயிர்களுக்கு சொட்டுநீர் அமைப்பதன் மூலம் அதிக விளைச்சலும், கூடுதல் லாபமும் கிடைக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில், நடப்பாண்டில் ரூ.40.13 கோடி மானியத்தில் 4,917 எக்டர் பரப்பில் சொட்டுநீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 100 சதவீதம் மானிய விலையிலும், இதர விவசாயிகள் 75 சதவீதம் மானிய விலையிலும் சொட்டுநீர் பாசன அமைப்பு அமைத்து பயன்பெலாம். கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 25 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.1.25 கோடியில் மானியம் வழங்கப்படவுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் 91 கிராம ஊராட்சிகளில் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம், 13 துறைகளின் செயல் திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றி, பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்து, விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பயிற்சி கருத்தரங்கம் மற்றும் கருத்துக் கண்காட்சி ஆகியவற்றில் விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதால் புது தொழில்நுட்பங்கள் மற்றும் புது முயற்சிகளில் ஈடுபட்டு, மற்ற விவசாயிகளுக்கும் முன் உதாரணமாக இருந்து அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தோட்டக்கலை பயிர் சாகுபடியை சிறப்பாக அமைத்துக் கொண்டு வருமானத்தை இரட்டிப்பாக்கலாம். மேலும், விவசாயிகள் நடைமுறையில் சந்திக்கும் இடர்பாடுகளான சாகுபடி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள் சந்தைப்படுத்துதலில் உள்ள இடர்பாடுகளை களைந்து அதிக வருமானம் ஈட்ட முடியும். மேலும், சிறப்பாக சாகுபடி செய்து வருமானத்தை இரட்டிப்பாக்கிய விவசாயிகளிடமிருந்து வெற்றிக்கதைகள் அடங்கிய அனுபவத்தை பிற விவசாயிகள் தெரிந்துகொள்ள ஏதுவாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இக்கருத்தரங்கில், மருத்துவ பயிர்களின் சாகுபடி முக்கியத்துவம், பாதுகாக்கப்பட்ட காய்கறி பயிர் சாகுபடி, முருங்கை சாகுபடி (இலை மற்றும் காய்) தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயம் மற்றும் தேனீக்களின் முக்கியத்துவம் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், வேடசந்தூர் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் முனைவர் ப.மணிவேல், ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம் திட்ட அலுவலர்ஃதுணை இயக்குநர் திரு.கோ.சீனிவாசன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஜோ.பெருமாள்சாமி, தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர்.பாலகும்பகன், கன்னிவாடி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம் திரு.பி.செல்வமுகிலன், மதுரை விபிஸ் இயற்கை தேனீ பண்ணை முனைவர் எஸ்.ஜோஸ்பின், காந்திகிராமம் வேளாண் அறிவியல் மையம் திரு.எஸ்.செந்தில்குமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.