மூடு

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உதயம் சான்றிதழை பெறுவதற்கு இணையதள பதிவு 01.07.2020 முதல் அமலுக்கு வருகிறது

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2020

செ.வெ.எண்:-01/2020 நாள்:02.07.2020

திண்டுக்கல் மாவட்டம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உதயம் சான்றிதழை பெறுவதற்கு இணையதள பதிவு 01.07.2020 முதல் அமலுக்கு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நிறுவனங்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என வகைப்படுத்தவும், இணையத்தில் பதிவு செய்திடவும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. உத்யோக் ஆதார் மெமோராண்டம் சான்றிதழுக்கு பதிலாக உதயம் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். உதயம் சான்றிதழை பெறுவதற்கு இணையதள பதிவு 01.07.2020 முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, குறு நிறுவனங்கள் எனில் இயந்திரங்களின் முதலீட்டுத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் ஆண்டு விற்று முதல் ஐந்து கோடிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறு நிறுவனங்கள் எனில் இயந்திரங்களின் முதலீட்டுத் தொகை பத்து கோடி ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் ஆண்டு விற்று முதல் ஐம்பது கோடிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடுத்தர நிறுவனங்கள் எனில் இயந்திரங்களின் முதலீட்டுத் தொகை ஐம்பது கோடி ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் ஆண்டு விற்று முதல் இருநூற்று ஐம்பது கோடிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தங்களது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை உதயம் இணைய வழி பதிவு தளத்தில் பதிவு செய்யலாம். பதிவு செய்த பின் பதிவு எண் வழங்கப்படும். பதிவை புதுப்பிக்க தேவை இல்லை. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பதிவு நடைமுறை முழுவதும் ஆன்லைனில் காகிதப்பயன்பாடு இல்லாமல் சுயஉத்தரவாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். ஒரு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலகத் தொழிற்சாலையைப் பதிவு செய்வதற்காக எந்த ஒரு ஆவணத்தையோ அல்லது ஆதாரத்தையோ பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

நிரந்தரக் கணக்கு எண் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி இணைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் ஆண்டுத்தொழில் தொகை குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட அரசு தரவுத் தொகுப்பில் இருந்து தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். ஒரே சரக்கு மற்றும் சேவை வரி எண் கொண்ட அனைத்து நிறுவனங்களும் ஒரே நிறுவனமாக கொள்ளப்படும் மற்றும் அதன் ஆண்டு உற்பத்தி திறன் முதலீடுகளும் கூட்டாக கணக்கிடப்படும்.

தற்போது EM-Part II மற்றும் உத்யோக் ஆதார் மெமோராண்டம் (UAM) வைத்துள்ள நிறுவனங்கள் உதயம் இணையதளத்திலும் 01.07.2020-க்கு பின்பு பதிவு செய்திருத்தல் வேண்டும். ஒரு நிறுவனம், ஒன்றுக்கு மேற்பட்ட உதயம் சான்றிதழ் பதிவு செய்தல் கூடாது. மேலும் 30.06.2020 வரை பதிவு செய்த நிறுவனங்கள் இவ்வறிவிப்பு படி மறு வரையறை செய்யப்படும். மேலும், இந்நிறுவனங்களின் சான்று 31.03.2021 வரை மட்டுமே செல்லத்தக்கது.

உதயம் பதிவு செய்ய விண்ணப்பம், உதயம் இணையதளத்தில் (www.udyamregistration.gov.in)கொடுக்கப்பட்டுள்ளது. உதயம் சான்றிதழ் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் வைத்திருத்தல் வேண்டும்.

மேலும் விவரங்களை, திண்டுக்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் பொது மேலாளரை நேரிலோ அல்லது 0451-2470893, 2471609 என்ற தொலைபேசி எண்ணிகளிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-