குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழக அரசின் நிதி உதவியுடன் சர்வதேச சான்றிதழ் பெறலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 05/09/2019

செ.வெ.எண்:-13/2019 நாள்:05.09.2019
திண்டுக்கல் மாவட்டம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழக அரசின் நிதி உதவியுடன் சர்வதேச சான்றிதழ் பெறலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழக அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சர்வதேச போட்டிக்கு ஏற்ப தங்களை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் ISO 9001 / ISO14001 / HACCP / BIS / ZED உள்ளிட்ட சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற ஏற்படும் செலவின் தொகையில் (ஒவ்வொரு தரச்சான்றிதழுக்கும் 100 விழுக்காடு) அதிகபட்சமாக ரூபாய் ஒரு இலட்சம் வரை ஈடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்காணும் தரச்சான்றிதழ்கள் பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருட்களின் தரத்தை உயர்த்திக் கொள்வது, உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் போட்டியைத் தவிர்த்து, சந்தையில் உற்பத்தி பொருட்களின் தேவையை அதிகரிப்பது, அதன்பொருட்டு அந்நிறுவனத்தின் மதிப்பினை கூட்டுவது, நிறுவனத்தை விரிவாக்கம் செய்து கொள்வது மற்றும் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல் ஆகியவற்றுடன் தரச்சான்று பெறும் நிறுவனங்கள் மக்கள் மத்தியில் நிலையான இடத்தை வகித்துக் கொள்வது போன்ற பல பயன்கள் இத்திட்டத்தின் மூலம் பெற வாய்ப்புள்ளது. இச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ஆகும் செலவீனத் தொகையை (அதிகபட்சமாக ரூபாய் ஒரு இலட்சம்) தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

ஆகவே, மேற்காணும் திட்டத்தினை, திண்டுக்கல் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி, தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தி, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.