மூடு

கொரோனா வைரஸ் நோய் ஒழிப்பு நடவடிக்கையாக சமூக பரவலை தடுக்கின்ற வகையில் பொதுமக்களுக்கு வீடு தேடி வரும் மளிகைப் பொருட்கள் சிறப்பு பரிசுத் திட்டத்துடன் வழங்கும் பணி மற்றும் காய்கறி தொகுப்பு விற்பனையை துவக்கி வைத்து மற்றும் அம்மா உணவகத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2020
minister

செ.வெ.எண்:-11/2020 நாள்:04.04.2020
திண்டுக்கல் மாவட்டம்

கொரோனா வைரஸ் நோய் ஒழிப்பு நடவடிக்கையாக சமூக பரவலை தடுக்கின்ற வகையில் பொதுமக்களுக்கு வீடு தேடி வரும் மளிகைப் பொருட்கள் சிறப்பு பரிசுத் திட்டத்துடன் வழங்கும் பணி மற்றும் காய்கறி தொகுப்பு விற்பனையை துவக்கி வைத்து மற்றும் அம்மா உணவகத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..

————————————————————————————————————————————-

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் ஒழிப்பு நடவடிக்கையாக சமூக பரவலை தடுக்கின்ற வகையில் பொதுமக்களுக்கு வீடு தேடி வரும் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்பு விற்பனை – பொதுமக்கள் வெளியிடங்களுக்கு வருவதை தவிர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவோருக்கு பரிசு வழங்கும் திட்டத்தினை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்து, திண்டுக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாயவிலைக் கடையில் கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை ரூ.1000 வழங்குதல் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் இன்று (04.04.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுத்திட இயலும். பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் பொருட்டு, வெளியில் அதிகளவில் வருவதால் கொரோனா நோய்த்தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை சீர் செய்து, பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்திடும் பொருட்டும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்திடும் வகையிலும், தரமான பொருட்கள் நியாயமான விலையில் பல்வேறு பகுதிகளில் அவரவர் வீடு தேடி பொருட்களை கொண்டு சேர்க்க வசதியாக வீடு தேடி மளிகைப் பொருட்கள் திட்டம் திண்டுக்கல் மாநகராட்சியில் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 48 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும்..

அதன்படி, ரூ.2000 மதிப்புள்ள ஒரு மளிகை தொகுப்பில், ராஜ போகம் அரிசி 5 கிலோ, இட்லி அரிசி 2.5 கிலோ, துவரம் பருப்பு 500 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், புளிநயம் 125 கிராம், நாகா ஆட்டா 500 கிராம், மஞ்சள் தூள் 50 கிராம், சீனி 500 கிராம், கடலை பருப்பு 100 கிராம், பச்சை பட்டானி 100 கிராம், சுண்டல் 100 கிராம், சீரகம் 50 கிராம, மிளகு 50 கிராம், கடுகு 50 கிராம், வத்தல் 125 கிராம், சக்தி மிளகாய் தூள் 50 கிராம், எல்.ஜி. தூள் 25 கிராம், மல்லித்தூள் 50 கிராம், நல்லெண்ணெய் 200 மில்லி, சூரியகாந்தி எண்ணெய் 500 லிட்டர், கிரிஸ்டல் கல் உப்பு 1 கிலோ, கிரிஸ்டல் தூள் உப்பு 1 கிலோ, சாம்பார் பொடி 50 கிராம், வெந்தயம் 50 கிராம், சோம்பு 25 கிராம், தேங்காய் எண்ணெய் 50 மில்லி, ரசம் பொடி 50 கிராம், அணில் ரவா 200 கிராம், அணில் சம்பா ரவா 200 கிராம், அணில் சேமியா 200 கிராம், அணில் ராசி சேமியா 200 கிராம், அப்பளம் 1 பாக்கெட், விம் சோப்பு 1 எண்ணிக்கை, எக்ஸ்சோ நார் 1 எண்ணிக்கை, டெட்டால் சோப்பு 1 எண்ணிக்கை, நெய் 50 மில்லி, டீ தூள் 25 கிராம், புரு காபி 1 பாக்கெட் ஆகிய பொருட்கள் உள்ளன. மேலும் இதேபொருட்கள் பாதி அளவில் ரூ.1000 மதிப்பில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டோர்டெலிவரி முறையில் பொருட்கள் தேவைப்படுபவர்கள் 994406876 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு பொருட்களை பெறலாம்..

இத்தொகுப்பு திட்டத்தினை வீட்டிலிருந்தே பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.2000 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு வீடு தேடி பொருட்களை வழங்கும் பணியாளர்கள் மூலம் பரிசு கூப்பன் வழங்கப்படும். பரிசு கூப்பன் பெற்றவர்களுக்கு இம்மாத இறுதியில் குலுக்கல் நடைபெறும். அதில் முதல் பரிசிற்கு தேர்வு செய்யப்படும் ஒரு நபருக்கு ரெப்ரிஜிரேட்டரும், இரண்டாம் பரிசாக 2 நபர்களுக்கு பீரோவும், மூன்றாம் பரிசாக மூன்று நபர்களுக்கு பிரஸ்சர் குக்கரும், சிறப்பு பரிசாக 108 நபர்களுக்கு சேலையும் வழங்கப்படும். இதனைப்போன்றே வீடுகளுக்கு வாகனங்கள் மூலம் நேரடியாகச் சென்று 13 காய்கறிகள் அடங்கிய காய்கறி தொகுப்பு ரூ.100-க்கு வழங்கப்பட உள்ளன.

இதன்நோக்கம் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியிடங்களுக்கு வருவதை தவிர்ப்பதற்கும், சமூக பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கும் இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. .

(2) மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுத்திட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் விலையில்லா உணவுப் பொருட்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கும் திட்டம் 02.04.2020 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரிசி பெறும் 6,27,004 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை 1035 நியாயவிலைக் கடைகள் மூலம் வழக்கப்பட உள்ளது. .

தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நிவாரணத்தொகை ரூ.1000-த்தினை குடும்ப அட்டைதாரர்களின் வீடுவீடாகச் சென்று வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, 05.04.2020 மற்றும் 06.04.2020 ஆகிய 2 நாட்களில் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரணத் தொகை வழங்கப்படும். நிவாரண உதவித்தொகை விடுபட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்..

05.04.2020 அன்று நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான தேதி குறிப்பிட்ட டோக்கன் வழங்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து, 06.04.2020 அன்று ஏற்கனவே (04.04.2020க்கு முன்னர்) டோக்கன் வழங்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும். .

07.04.2020 அன்று முதல் தேதி குறிப்பிடப்பட்ட டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நியாயவிலைக்கடைகளில் விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் தேதி குறிப்பிடப்பட்ட நாட்களில் மட்டுமே நியாயவிலைக் கடைகளுக்கு வரவேண்டும். .

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை, எளிய மக்கள், கட்டிடத் தொழிலாளர்கள், வெளி மாவட்டங்களில் தங்கி குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் வயிறார உணவு உண்ண வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தினை துவக்கி திறம்பட செயல்படுத்தினார்கள். இத்திட்டம் இந்தியாவிற்கே முன்னுதாரமாக சிறந்த திட்டமாக இன்றளவும் போற்றப்படுகிறது. அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் தரமான சுவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசின் சார்பில் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற பொதுமக்களுக்கு விலையில்லாமல் 3 வேளையும் சுவையான உணவு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் 740 நபர்கள், சாலையோரம் குடியிருக்கும் வாழ்வாதாரமற்ற 210 நபர்களுக்கும், வெளிமாநிலத்தவர் 7 நபர்கள் என மொத்தம் 957 நபர்களுக்கு அம்மா உணவகம் மூலமாக தினந்தோறும் 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. .

திண்டுக்கல் மாவட்டத்தில் வெளிநாடு சென்று வந்தவர்கள் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டவர்களும் அரசு தலைமை மருத்துவமனையில் தனியாக தங்க வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 43 நபர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிப்பதற்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்து, உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படும். .

கொரோனா வைரஸ் நோய் சமூக பரவலாக மாறாத வகையில் பொதுமக்கள் வெளி இடங்களுக்கு வரும் போது சமூக இடைவெளியை பின்பற்றி கூட்டம் கூடுவதை தவிர்த்து அரசு கொண்டு வந்துள்ள 144 தடை உத்தரவை முழுமையாக பின்பற்றி சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட சமூக அக்கறையுடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்..

இந்நிகழ்ச்சிகளில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.வி.மருதராஜ், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.செந்தில்முருகன்;, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.முருகேசன் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-